உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணமும் இலக்கியமும் போற்றிய மதுரை!

புராணமும் இலக்கியமும் போற்றிய மதுரை!

தமிழர்கள் அற நுால்களைப் பெரிதும் போற்றி வந்தனர். சங்க கால நுால்கள் எல்லாமே, மதுரையில் உள்ள சங்கப் பலகையில் அரங்கேற்றப்பட்டவை. எந்த நுாலை, சங்கப் பலகை ஏற்றுக் கொள்கிறதோ, அந்த நுால் தான், தமிழ் கூறும் புலவர்கள் முன் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது தெளிவாகும்.உலகிற்கு திருவள்ளுவர், திருக்குறள் எனும் ஒப்பற்ற நுாலைத் தந்தாலும், இந்த நுால் அரங்கேறிய இடம், மதுரை மாநகரம் என்பதில், அந்த நகருக்கு ஒரு பெருமை உண்டு.

ஆலும் வேம்பும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பது பழமொழி. இங்கு, நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றன. நாலடியாரும், திருக்குறளும் வைகை ஆற்றின் கரையில் தவழ்ந்த நுால்கள் என்பதில் நாம் பெருமைப்படலாம்.

சமஸ்கிருத மொழியில், வால்மீகியால் இயற்றப்பட்ட ராமாயணத்தில், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை பொன்னாலும், முத்தாலும் அணி செய்யப்பட்டு இருந்தது எனும் குறிப்புஉள்ளது.அதேபோல, வியாச முனிவர் இயற்றிய மகாபாரதத்தில், பாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், பாண்டியர் குலத்துப் பெண்மணியை திருமணம் செய்து கொண்ட விபரம் உள்ளது.மகா வம்சம் என்பது, இலங்கையின் பழங்கால வரலாற்றை கூறும் நுால். இலங்கை வேந்தனாகிய விஜயன், பாண்டிய மன்னனின் மகளை மணந்ததாக, மகா வம்சம் கூறுகிறது. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், பாண்டிய நாட்டின் முத்தையும், மெல்லிய துகிலையும் பெரிதும் பாராட்டி கூறியுள்ளார்.

கிரேக்க நாட்டு யாத்திரிகரான மெகஸ்தனிஸ், பாண்டிய நாட்டை பெரிதும் பாராட்டி இருக்கிறார்.மதுரை காண்டம்அசோகருடைய கல்வெட்டுகளிலும், பாண்டிய நாட்டின் பெருமைகள் பேசப்படுகின்றன. பாண்டியநாட்டின் தலைநகர் மதுரை பல வசதிகளைப் பெற்றிருந்ததுடன், சிறந்த நிர்மாண அமைப்புடனும் இருந்ததாக, பல சமஸ்கிருத இலக்கியங்கள் தெளிவுற கூறியிருக்கின்றன.சிலப்பதிகாரம் மதுரை நகரை, ஐந்து இடங்களில் பேசுகிறது.சிலப்பதிகாரத்தின் இரண்டாவது காண்டத்தின் பெயரே, மதுரை காண்டம். மதுரை நகரம் பற்றிய குறிப்பு, 23 அடிகளில் குறிக்கப் பெறுவதுடன், மன்னன் நெடுஞ்செழியன் காலத்து மதுரையின் இயல்புகளும் எடுத்து இயம்பப்படுகின்றன.

புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என, இளங்கோ அடிகள் மதுரையையும், வைகையையும் போற்றிப் பாடியிருக்கிறார். பரிபாடலில், மதுரை மக்களின் வள்ளல் தன்மை விளக்கப்படுகிறது. மதுரை திருமகளுக்கு இட்ட திலகம் போல் விளங்கி, மதுரை பாண்டியனது வைகை உள்ளவரையும் புகழ் பெருமே அல்லாமல், ஒரு நாளும் பெருமை கெடாது என்று உரைக்கிறது பரிபாடல்.பொன்னால் ஆகிய வேப்ப மாலையை அணிந்த பாண்டியருக்கு, வழி வழியாக உரிமை உடையது மதுரை. புதிதாக திருமணம் ஆன பெண்ணினது கூந்தலையும், நெற்றியையும் போல, மதுரை மாநகர தெருக்கள் மணம் பரப்புகிறது.

திருவிழாக்கள் இல்லாத நாளே இங்கு இல்லை... என்கிறது அகநானுாறு இலக்கியம்.நெல்லு நீரு மெல்லார்க்கு மெனியவென வரைய சாந்தமுன் திரைய முத்தமும்இமிழ்குரன் முரசு மூன்றுடனாளும்தமிழ்கெழு கூடற் நன்கோல் வேந்தே என்பது புறநானுாறு சொல்லும் செய்தி.தமிழால் சிறப்பா? தமிழால் மட்டும் மதுரைக்கு சிறப்பு வந்து விடவில்லை. மற்றொரு சிறப்பும் உண்டு என்கிறது புறநானுாறு.பொதிகை மலையில் இருந்து மணம் வீசும் சந்தனத்தையும், துாத்துக்குடியில் கிடைக்கும் முத்தையும், அழகிய முரசையும் கொண்ட பாண்டிய மன்னர்கள், தமிழ் பொருந்திய செங்கோலை மதுரையில் துாக்கிப் பிடித்தனர் என்கிறது இப்பாடல்

.கற்றறிந்தார் ஏத்தும் கலி என்ற அடி, கலித்தொகையில் வருகிறது. கலித்தொகையில் பல இடங்களில், மதுரையைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றன. ஆற்றுப்படை நுால்களில் சிறந்த நுாலாக கருதப்படும், திருமுருகாற்றுப்படை நக்கீரரால் எழுதப்பட்டது.பாண்டியன், எல்லாரையும் வென்று, வெற்றி வீரனாக விளங்குவதால், மதுரை போரே இல்லாத வாயிலை உடையது; திருமகள் சிறிதும் அசைந்து கொடுக்காத அங்காடிகள், வீதிகளாக உள்ளன.பாண்டிய மன்னர்கள், தங்களுடைய வீரத்திலும், வெற்றியிலும் வைத்திருக்கிற பெருமதிப்பால், தாங்களே ஆடவர்கள் என்பதை சொல்வது போல், திருமுருகாற்றுப்படையில் எழுதி இருக்கிறார், நக்கீரர்.பெரிய புராணத்தைத் தந்த சேக்கிழாரும், மதுரையில் தமிழ் வளர்த்த பெருமையையும், சொக்கநாத பெருமானின் புகழையும், மதுரையின் பெருமையையும், பல இடங்களில் பாடி உள்ளார்.

திருவிளையாடல் புராணம், 64 திருவிளையாடல்களை எடுத்து இயம்புகிறது. மதுரை திருத்தலத்தில், பல திருவிளையாடல்களை இறைவன் நிகழ்த்தியதாக, அழகாக எடுத்துரைக்கிறார், பரஞ்சோதி முனிவர். மதுரை, பல வகை வளங்களும் பெற்று, பாண்டிய நாட்டின் நடுவில் அமைந்துள்ள நகர். பாண்டிய நாட்டை பல அணிகலன்கள் பூண்ட நங்கை என்று கொண்டால், அந்த நங்கையின் பெருமை பொருந்திய முகமாக, மதுரையை கொள்ளலாம் என்பது, பரஞ்சோதியாரின் தீர்க்கமான எண்ணம். பாண்டி மண்டல திலகம் எனும் இலக்கியம், நுாறு பாடல்களைக் கொண்டது; மதுரை அய்யன் பெருமான் என்பவரால் இயற்றப்பட்டது. மதுரையில் உள்ள பல கல்வெட்டுகளும், மதுரையின் பெருமையைப் பேசுகின்றன.பாண்டிய மன்னர்கள் செய்த அறக் கொடைகளும், அவர்களுடைய கீர்த்தியும், வென்ற போர்களும் பல கல்வெட்டுகள் வாயிலாக தெரிய வருகின்றன.

பெண்களுக்கு முக்கியத்துவம்: மதுரையில் ஆண்டு தோறும், தினசரி பல விழாக்கள் நடைபெறுகின்றன. இதில், குறிப்பிடத்தக்க விழா, செங்கோல் ஒப்படைக்கும் விழா. சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாவில், எட்டாம் திருநாள் அன்று, மீனாட்சி அம்மைக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று, மீனாட்சி அம்மையின் கையில், செங்கோலை கொடுக்கும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும், மதுரையம்பதி மீனாட்சி அம்மையின் ஆட்சியின் கீழ் இருக்கும்; ஆவணி மாதத்தின் போது நடைபெறும் ஏழாம் திருநாளன்று, சொக்கநாத பெருமானுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, மீனாட்சி அம்மையின் கையில் இருக்கும் செங்கோல், சொக்கநாதர் கைக்கு மாறும். அதாவது, எட்டு மாதங்கள் சொக்கநாதருடைய ஆட்சியில் மதுரை இருக்கும்.பெண்களுக்கு ஆட்சியில் முக்கியத்துவம் கொடுத்த நகராக மதுரை இருந்தது என்பதை உணர முடிகிறது.

இவ்வளவு பெருமைகளைக் கொண்ட மதுரையை, தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக ஆக்குவதில் தவறில்லை.பல புராணங்களும், பல தமிழ் இலக்கியங்களும், மதுரையின் பெருமையை வானளாவிய அளவில் புகழ்ந்துள்ளதை நோக்கும் போது, நான் மாடக் கூடலானமதுரையம்பதி, தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக தகுதியானது தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !