உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்

சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்

சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சந்தன மரத்தில், 11 அங்குல உயரத்தில், பிரபல சிற்பக் கலைஞர் பரணி வடிவமைத்துள்ள, நர்த்தன விநாயகர் சிலை, மக்களை கவர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்,திருமழிசையை சேர்ந்தவர் சிற்பக் கலைஞர், பரணி. இவர், மர சிற்பங்கள் வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். குறிப்பாக, சந்தன மரத்தில் சிற்பங்களை வடிவமைப்பதில், பிரசித்திபெற்றவர். இதற்காக, பல்வேறு தேசிய, மாநில விருதுகளை பெற்றவர்.நாடு முழுதும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, சந்தன மரத்தில் கலை நயத்துடன் கூடிய விநாயகர் சிற்பத்தை, பரணி வடிவமைத்துள்ளார். இந்த சிலை, 11 அங்குல உயரத்தில், ஏழு அங்குல அகலத்தில், மூன்று அங்குல தடிமனில் அமைந்துள்ளது. சிலையில் தாமரை மலரை, யானை துதிக்கையால் தாங்கி நிற்பது போலவும், அதன் மேல் விநாயகர் நடனமாடுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அச்சிலையில்அவரின் வாகனமான மூஞ்சுறு, இசை வாசிப்பதுபோல தத்ரூபமாக உள்ளது. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சிலை, மூன்று மாத உழைப்பில் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !