பாகவதமேளா நாடக மகோத்ஸவம் இன்று துவக்கம்!
தஞ்சாவூர்: தஞ்சை அருகே மெலட்டூரில் பாகவத மேளா நாடக மகோத்ஸவம் இன்று (18ம் தேதி) துவங்கி 10 நாட்கள் நடக்கிறது என, மெலட்டூர் ஸ்ரீலெட்சுமி நரசிம்மா ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்கத்தலைவர் நடராஜன் தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சையில் மெலட்டூர் ஸ்ரீலெட்சுமி நரசிம்மா ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்கத்தலைவர் நடராஜன் மேலும் கூறியதாவது: தஞ்சையில் மெலட்டூர், சாலியமங்கலம், ஊத்துக்காடு, தே.பெருமாநல்லூர், சூரமங்கலம் ஆகிய ஐந்து இடங்களில் பழம்பெருமை மிக்க பாகவத மேளா நாடகம் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது மெலட்டூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1938ம் ஆண்டு சங்கம் துவங்கப்பட்டது. தொடர்ந்து 72வது ஆண்டாக நடப்பாண்டு பாகவதமேளா நாடகங்கள் நடத்தப்படுகிறது. இவ்விழா, மெலட்டூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் சந்நிதியில் 18ம் தேதி இரவு 7.30 மணியளவில் திருக்கருகாவூர் சகோதரர்கள் ரமணன், சரவணன் குழுவினரின் நாதஸ்வரம் மங்கள இசையுடன் துவங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு துவக்க விழா, 9.30 மணிக்கு பாகவதமேலா நாடகம் பிரஹலாத சரிதம், இரவு பரதநாட்டியம் நடக்கிறது. வருமம் 20ம் தேதி இரவு பாகவதமேளா பாகவதமேளா நாடகம் சதி சாவித்திரியும், 21ம் தேதி இரவு லட்சுமி கார்த்திக் இந்து சந்தோஷ் பரதநாட்டியம், ஸ்ரீ வள்ளி தமிழ்நாட்டிய நாடகம், 22ம் தேதி இரவு அரிச்சந்திரா இரண்டாம் பாகம், 24ம் தேதி இரவு கிரண் ராஜகோபாலன் பரதநாட்டியம், தன்யா சந்திரமோகன் பரதநாட்டியம், 25ம் தேதி இரவு ருக்மணி பாகவத மேளா நாடகம், 26ம் தேதி இரவு வள்ளி திருமணம் தமிழிசை நாடகம், 27ம் தேதி இரவு 7.30 மணி மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு ஆராதனை ஆகியவை நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார். தஞ்சை மாவட்டம், மெலட்டூரை சேர்ந்த வெங்கட்டராம சாஸ்திரி என்பவர் மெலட்டூரில் பாகவத மேளா நாடகங்களை தெலுங்கு மொழியில் எழுதி அரங்கேற்றியுள்ளார். இந்நாடகங்களை தெலுங்கு மொழியிலேயே தொடர்ந்து, தடையின்றி குழுவினர் தற்போதும் நடத்தி வருகின்றனர். பெண்கள் கதாபாத்திரத்தில் நடித்தால், உடல் உபாதையால் நாடகம் நடத்த முடியாது நின்று போய்விடும் என்பதால், பெண்கள் வேடத்தை ஆண்களே தரித்து தத்ரூபமாக நடிக்கின்றனர். ஏற்பாட்டை மெலட்டூர் ஸ்ரீலெட்சுமி நரசிம்மா ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்கத்தினர் செய்து வருகின்றனர்.