ராமேஸ்வரம் கோயில் கோபுரம் நிலைக்கால்: சிருங்கேரி சுவாமி துவக்கி வைப்பு!
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு கோபுரத்திற்கு நிலைக்கால் வைக்கும் பணியை சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள் நேற்று துவக்கி வைத்தார். ராமேஸ்வரம் வந்துள்ள இவர், ராமநாதசுவாமி சன்னதி கருவறைக்குள் சென்றவர் ஒரு மணி நேரம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். பின் பர்வதவர்த்தனி அம்பாள் சன்னதிக்கு சென்றவர் அம்பாளுக்கு திரிசதை பூஜை செய்து வழிபட்டார். இதனால் நேற்று காலை 6 முதல் 8 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் தெற்கு கோபுரத்தின், 26 அடி உயர நிலைக்கால் கீழ் பகுதியில் நவரத்தினக்கற்கள், தங்கம்,வெள்ளி காசுகளை போட்டார். பின்னர் சிமென்ட் பூசி நிலைக்கால் பொருத்தும் பணியை துவக்கி வைத்தார். கோயில் தக்கார் ராஜா குமரன்சேதுபதி, இணை கமிஷனர் ஜெயராமன், அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், ராம்கோ சிமென்ட் ராமசுப்ரமணியராஜா, சிருங்கேரி மடம் நிர்வாக அதிகாரி கவுரிசங்கர், ராமேஸ்வரம் சங்கர மடம் மேனேஜர் மணிகண்டி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.