உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகோதர உறவுகளை மேம்படுத்த ஆயிரம் ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை!

சகோதர உறவுகளை மேம்படுத்த ஆயிரம் ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை!

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே, பூச்சியூரில், நள்ளிரவில் ஆயிரம் ஆடுகள் வெட்டி, பூஜை நடந்தது. நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் குரும்பா இன மக்களின் குல தெய்வங்களான மகாலட்சுமி, தொண்டம்மாள், வேட்டைக்காரசாமி கோவில்கள் உள்ளன. இதில், ஆர்யகுலத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும், தங்களது சகோதர உறவுகளை மேம்படுத்திக் கொள்ள, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பூச்சியூரில், வேட்டைக்காரசாமி கோவில் மைதானத்தில், பொங்கல் வைத்து, வேட்டைக்காரசாமியை குடும்பத்துடன், வழிபடுவது வழக்கம். இதில், ஆர்யகுலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, அதே குலத்தைச் சேர்ந்த ஆண்கள், பொங்கல் பானை வாங்கிக் கொடுத்து, சேலை உள்ளிட்ட சீர்வரிசை செய்வர். பின், கோவில் மைதானத்தில் வேட்டைக்காரசாமிக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவர். இதே போல,பொங்கல் விழாவுக்கு, தங்களுடைய ஆர்யகுலத்தை சேர்ந்த சகோதரர்களை, பெண்கள், வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து மகிழ்வர். விழாவையொட்டி, பூச்சியூர் கோவில் மைதானத்தில், வேட்டைக்காரசாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள், பொங்கலிட்டு, வழிபாடு நடத்த நூற்றுக்கணக்கான பானைகள், அடுப்புகளுடன் மைதானத்தில் தயார் நிலையில் இருந்தன. இதே குலத்தைச் சேர்ந்த ஆண்கள், தங்களது குலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்கள், தழைத்தோங்க கோவில் மைதானத்தின் ஒரு பகுதியில், ஆடுகளை பலியிட்டு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று முன்தினம் இரவு, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள்,வேன்களில், ஆடுகளை ஏற்றிக் கொண்டு பூச்சியூரில் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவு துவங்கிய ஆடு பலியிடும் நிகழ்ச்சி, நேற்று காலை 10 மணி வரையில், தொடர்ந்து நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும், மேற்பட்ட ஆடுகள் பலி, கொடுக்கப்பட்டன. வெட்டப்பட்ட ஆடுகளை பக்தர்கள், தங்களது வீடுகளுக்கு உடனுக்குடன் எடுத்து சென்றனர். விழா குறித்து, பக்தர்கள் கூறியதாவது:உறவுகளிடையே சுமூக நிலை ஏற்பட, இது போன்ற விழாக்கள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 12 ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறை. ஒவ்வொரு தலைமுறை இடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகளை நீக்கி, சகோதர, சகோதரிகளிடையே இனிமையான, மகிழ்ச்சியான உறவை ஏற்படுத்தும் பொருட்டு, இவ்விழா நடத்தப்படுகிறது. இது போன்ற விழாக்கள், குரும்பா இனத்தின் வெவ்வேறு குலங்களின் சார்பாக, கருவூலர் அருகே தொட்டக்காலம்புதூர், கண்ணம்பாளையம், சூலூர் அருகே குரும்பப்பாளையம் ஆகிய இடங்களிலும் நடக்கும். இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.விழாவையொட்டி, பாலமலை இருளர்கள் உள்ளிட்ட, மலைவாழ் மக்களை கவுரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !