மைசூரு தசரா விழா: எளிமையாக கொண்டாட முடிவு
பெங்களூரு, கொரோனா பரவுவதால், இம்முறை மைசூரு தசரா விழாவை, சம்பிரதாயத்துக்கு பாதிப்பு வராமல், அரண்மனை வளாகத்தில் மட்டும் எளிமையாக கொண்டாட, கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ளது.கர்நாடகாவின், மைசூரில் மன்னர் காலத்தில் இருந்தே, தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படும். கர்நாடகாவின் பாரம்பரிய கலைகளான டொள்ளு குனிதா, வீர காசே, பூஜா குனிதா உட்பட அனைத்து விதமான கலைநிகழ்ச்சிகளும், பத்து நாட்கள் இடம்பெறும்.
பரிசுகள், ஊக்கத்தொகை: இதில் பங்கேற்கும் கலைஞர்களை ஊக்குவித்து, அரசு சார்பில் கவுரவித்து பரிசுகள், ஊக்கத் தொகை வழங்கப்படும். மன்னர் ஆட்சி காலத்தின் போது தசரா விழாவை பார்ப்பதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பர். தற்போது தசரா விழாவில், மன்னர் வம்ச வாரிசுகள் பங்கேற்பர். விஜயதசமி அன்று சாமுண்டீஸ்வரி தேவியை, தங்கம், வைரம், பதித்த, 750 கிலோ அம்பாரியில் அமர வைத்து, யானைகள் புடைசூழ, அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னி மண்டபம் வரை ஊர்வலமாக செல்வர்.
இவ்விழாவுக்கு, உலகின் பல நாடுகளில் இருந்தும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருவதுண்டு. இதற்காக, அரண்மனை முன் அமைந்து உள்ள கண்காட்சி மையத்தில், தற்காலிகமாக 3,000க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும். இதன் மூலம் கைத்தறி, குடிசை தொழில், கைவினை பொருட்கள் என கிராமப்புற தொழில்கள் மேம்பாடு அடையும்.
நடப்பாண்டில் கொரோனா தொற்று பரவி வருவதால், தசரா விழா கொண்டாடப்படுமா என சந்தேகம் எழுந்தது.உயர் மட்ட ஆலோசனை இந்நிலையில், மைசூரு தசரா தொடர்பாக, பெங்களூரு விதான்சவுதாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், நேற்று காலையில், உயர் மட்ட ஆலோசனை நடந்தது. தசராவை எளிமையாக கொண்டாட, முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு பின், கன்னடம், கலாசாரத்துறை அமைச்சர் சி.டி.ரவி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமசேகர் இணைந்து, அளித்த பேட்டி:சம்பிரதாயத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், அரண்மனை மற்றும் சாமுண்டி மலையில் அதிக மக்கள் கூட்டம் சேர்க்காமல், எளிமையாக, தசரா திருவிழா கொண்டாட, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
தசரா திருவிழாவின், முக்கிய அம்சமான ஜம்பு சவாரி, அரண்மனை வளாகத்தில் நடத்தப்படும். ஆண்டு தோறும் நடக்கும் யுவ தசரா, கலாசார நிகழ்ச்சிகள், திரைப்பட திருவிழா, விவசாயி தசரா, விளையாட்டு போட்டி, மகளிர் நிகழ்ச்சிகள், மேளாக்கள் இருக்காது. சாமுண்டி மலையில், நடக்கும் சம்பிரதாயம், அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகள் வழக்கம் போன்று நடக்கும். குஸ்தி போட்டிகள்சில நிகழ்ச்சிகளை படம் பிடித்து, ஊடகங்களில் ஒளிபரப்பும்படி, ஆலோசனை வந்துஉள்ளது.
சம்பிரதாயப்படி குஸ்தி போட்டிகள் நடக்கும். மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளது. போலீஸ் அணிவகுப்பும், இம்முறை இருக்காது. அவரவர் வீட்டில் தசரா கொண்டாடலாம். விரைவில் மைசூரில் கூட்டம் நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படும். எளிமையாக தசரா கொண்டாடுவதால், வி.ஐ.பி.,க்கள், வி.வி.ஐ.பி.,க்களுக்கு, பாஸ் வழங்க வேண்டிய அவசிய மில்லை. அதிக மக்கள் கூட்டமும் இருக்காது.ஆடம்பரமாக தசரா கொண்டாடினால், அதிகமான கூட்டம் சேரும். கொரோனா வைரஸ் தொற்று, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றும். இதை தவிர்க்கும் நோக்கில், எளிமையாக கொண்டாடப்படும்.கூடுதல் நிதிமைசூரில், இம்முறை தசரா கொண்டாட, அரசு சார்பில் 10 கோடி ரூபாய், மைசூரு நகர அபிவிருத்தி ஆணையம் சார்பில், 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அவசியம் ஏற்பட்டால், கூடுதல் நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே, 410வது மைசூரு தசரா விழா, ஆடம்பரமின்றி கொண்டாட, அரசு முடிவு செய்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.