புரட்டாசி சனி வழிபாடு: பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருப்பூர்: கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வசதிகளுடன், பெருமாள் கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடக்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.திருப்பூர் மாவட்டத்தில், மொண்டிபாளையம் வெங்கடேசபெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், அவிநாசிபாளையம் ராமசாமி கோவில், திருப்பூர் வீர ராகவப்பெருமாள் கோவில், தாராபுரம் ஆஞ்சநேயர் கோவில் என, வைணவ தலங்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு களைகட்டும்.பக்தர்கள் கூறியதாவது:கொரோனாவை ஒழித்துக்கட்ட, இறைவழிபாடு அவசியம். எனவே, கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. புரட்டாசி சனிக்கிழமை, சுகாதாரத்துறையினர் முக்கிய கோவில்களில் முகாமிட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பிறகே கோவிலில் அனுமதிக்கலாம். கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின், சமூக இடைவெளியுடன் கூடிய வரிசைக்கு அனுமதிக்கலாம். பக்தர்கள், கோவிலின் எப்பகுதியையும் கையில் தொடாமல் வழிபட்டு செல்ல அறிவுறுத்தலாம்.மஞ்சளும், துளசியும் இருக்கும் இடத்தில் நோய்க்கிருமி அண்டாது. எனவே, பெருமாள் கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில்,புரட்டாசி சனிக்கிழமை தரிசன ஏற்பாடு துவங்கியுள்ளது.வருவாய்த்துறை ஆலோசனையை பெற்று, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர், என்றனர்.