உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி வெயில் எதிரொலி: திருமலையில் பக்தர்கள் கூட்டம்!

அக்னி வெயில் எதிரொலி: திருமலையில் பக்தர்கள் கூட்டம்!

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வார விடுமுறையையொட்டி, சாமி தரிசனத்திற்காக நாடெங்கிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் கூட்டம், திருமலை முழுவதும் கடந்த இரு தினங்களாக குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில், 40 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு பாதயாத்திரையாக வந்தனர். 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், 20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 50 ரூபாய் சுதர்சன டோக்கன், 12 ஆயிரம் வரை விற்பனை ஆனது.இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை சேர்த்து மொத்தம், 90 ஆயிரம் பேர் வரை சாமி தரிசனம் செய்தனர். திருமலை கோவிலில், வைகுண்டம் இரண்டாவது கியூ காம்ப்ளக்சின், 31 வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும் இலவச கியூவில் நிற்கும் பக்தர்கள் கூட்டம், நீண்ட தூரம் வரை நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.நேற்று பிற்பகல் நிலவரப்படி, இலவச தரிசனத்திற்கு, 12 மணி நேரமும், சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கம்போல் தங்கும் விடுதிகள் கிடைக்காத பக்தர்கள், திருமலையின் சாலையோரங்களில், இரவு நேரத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுத்தனர்.அக்னி வெயிலின் எதிரொலியால் இம்மாதம் முழுவதும், அதிகளவிலான பக்தர்கள் வார நாட்களிலும் சாமி தரிசனம் செய்வதற்காக, தொடர்ந்து திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !