நாகையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
நாகப்பட்டினம்:நாகையில் நேற்று இரவு நடந்த ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவத்தில், கோவிந்தா,கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப் பிளக்க பக்தி பரவசத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஸ்ப்தகிரி சுவாமி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் நாகை, புதிய கடற்கரையில், நேற்று இரவு ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதற்காக திருப்பதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை நாகைக்கு வந்த ஸ்ரீனிவாசப் பெருமாள், அலமேலு மங்கை, பத்மாவதி தாயார் ஆகியோருக்கு நாகூரில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டு, அமிர்தானந்தமயி மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை பெருமாள் மற்றும் அலமேலு மங்கை, பத்மாவதி தாயார் ஆகியோருக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடந்தது.மாலை 6.30 மணிக்கு பெருமாள் மற்றும் தாயார் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். விஸ்வத்சேன ஆராதனையுடன் திருமண நிகழ்ச்சிகள் துவங்கியது. அன்னமார்ச்சாய கீர்த்தனை, அங்குரார்ப்பனம், ரக்ஷாபந்தனம், மதிவர்த்த பூஜைக்குப் பின் திருப்பதி தேவஸ்தான சங்கல்பம் நிகழ்ச்சியும், தொடர்ந்து பத்ம சங்கல்பம், மகா சங்கல்பத்தியம் நடந்தது. இரவு 8 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க, திருப்பதியில் இருந்து வந்திருந்த பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து 8.30 மணிக்கு பெருமாள், தாயார்கள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.திருக்கல்யாண நிகழ்ச்சியில்,அமைச்சர் ஜெயபால், கலெக்டர் முனுசாமி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் விண்ணை பிளக்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.