திருப்பரங்குன்றத்தில் மே 25ல் வைகாசி திருவிழா துவக்கம்!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா மே 25ல் சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது. அன்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு, சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்படும். அன்றிலிருந்து ஜூன் 2 வரை மாலை 6 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பூ அலங்காரமாகி, வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 30 நிமிடங்கள் வசந்த உற்சவம் நடக்கும். பால்குட திருவிழாவினை முன்னிட்டு ஜூன் 3 அதிகாலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டுவரும் பால், குடம் குடமாக சுவாமிக்கு, பகல் 2 மணிவரை அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 4 காலையில் தங்க குதிரை வாகனத்தில் சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு விழா முடிந்து, இரவு பூ பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைவார்.