அணை முனியப்பன் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு நிழற்கூடம்!
மேட்டூர்: மேட்டூர் அணை முனியப்பன் கோவில் வளாகத்தில், பயணிகள், பக்தர்கள் தங்குவதற்காகவும், உணவு சாப்பிடவும், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடம் கட்டப்படவுள்ளது. மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ளது முனியப்பன் கோயில். விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் சேலம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முனியப்பன் கோயிலுக்கு வருகின்றனர். மேலும், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற முனியப்பன் கோயிலில் ஆடு, கோழி பலியிட்டு, வளாகத்திலேயே சமைத்து சாப்பிடுவர். விசேஷ நாளில் முனியப்பன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்படும். கோயில் வளாகத்தில் நிழற்கூடம் இல்லாததால் கோடை காலத்திலும், மழைக்காலத்திலும் சமையல் செய்து சாப்பிடும் பக்தர்கள் நிழற்கூடம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி முனியப்பன் கோவில் வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட நிழற்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன் கூறியதாவது: வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நலன் கருதி அணை முனியப்பன் கோவில் வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், 150 அடி நீளம் மற்றும், 80 அடி அகலத்தில் பக்தர்கள் உணவு சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் பிரமாண்ட நிழற்கூடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மேட்டூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாய் மற்றும் என் சொந்த நிதி, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறேன். நிழற்கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.