உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்த சிறுமியின் ஆனந்தம்

அந்த சிறுமியின் ஆனந்தம்

திருப்பூர் கிருஷ்ணன்காஞ்சிபுரம் மடத்திற்கு பெற்றோருடன் வந்தாள் ஒரு சிறுமி. வியப்புடன் மகாசுவாமிகளைப் பார்த்த அவளிடம், ‘‘உன் பெயர் என்ன?’’ எனக் கேட்டார் மகாசுவாமிகள். ‘தீபா’ என்றாள். சுவாமிகளுக்கு கேட்காததால், ‘‘கொஞ்சம் சத்தமா சொல்வியா...’’ எனக் கேட்டார்.   ‘தீபா’  என உரத்த குரலில் சொன்னாள். அத்துடன் விடவில்லை. ‘ஸ்பெல்லிங் சொல்லேன்... பார்க்கலாம்’  என்றார்.‘டி பார் டாங்கி;  ஐ பார் அயர்ன்;  பி பார் பீப்பில்; ஏ பார் ஆன்ட்’ என விளக்கம் அளித்தாள்.  சுவாமிகளும், சுற்றியிருந்தவர்களும் கலகல எனச் சிரித்தனர். ‘ரொம்ப புத்திசாலியா இருக்கியே?’  என சிறுமியைப் பாராட்டினார். சிறுமியின் முகத்தில் அளவுகடந்த சந்தோஷம். அவளின்  பெற்றோர் முகத்தில் பெருமிதம்.சுவாமிகள் மேலும் பேச்சைத் தொடர்ந்தார். ‘நன்னாத் தான் சொல்றே. ஆனா உன் பேரோட டாங்கியையும் ஆன்ட்டையும் சேர்க்கறியே? கழுதை, எறும்புக்கு பதிலா நான்  வேற மாதிரி சொல்லித் தரவா?’’ எனக் கேட்டார். சிறுமிக்குப் பரம சந்தோஷம். ‘‘நீங்க சொல்லித் தந்தா கட்டாயம் கத்துக்குவேன்’’ என்றாள் ஆவலுடன். ‘‘டி பார் தேவி. தேவின்னா அம்பாள். காஞ்சி காமாட்சி கோயில்ல அம்பாளைப் பாத்திருக்கியோ?’’ ‘‘பாத்திருக்கேனே? டி பார் தேவி’’  என திருப்பிச் சொன்னாள். ‘‘அப்புறம் ஐ போர் இளங்கோ. இளங்கோ என்பவர் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை எழுதினவரு. அதுல கண்ணகியோட பெருமையை சொல்லியிருக்கார். உனக்கு கண்ணகியைத் தெரியுமோ?’’‘‘தெரியுமே! எங்க தமிழ் அம்மா சொல்லியிருக்கா’’  என்ற சிறுமி ‘ஐ பார் இளங்கோ’ என சுவாமிகள் சொன்னதை மனப்பாடம் செய்தாள்.‘‘அப்புறம் ‘பி பார் பிரகலாதன்’.  இரண்யனோட மகன்; பெரிய விஷ்ணு பக்தன்’’ ‘‘நரசிம்ம அவதாரத்தில மகாவிஷ்ணு இரண்யனை வதம் பண்ணின கதை எனக்குத் தெரியும்’’ என பெருமையோடு சொன்ன சிறுமி, ‘பி பார் பிரகலாதன்’ என்பதைச் சொல்லி மனப்பாடம் செய்தாள். ‘அப்புறம் கடைசி எழுத்து ஏ. ‘ஏ பார் ஆஞ்சநேயர்’  ஆஞ்சநேயர் யார்னு சொல்லு’’ எனக் கேட்டார். ‘‘ஆஞ்சநேயர் சிறந்த ராம பக்தர்; எனக்குத் தெரியும்’ என்றாள் சிறுமி. ‘ஏ பார் ஆஞ்சநேயர்’  என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள்.சிறுமிக்கு கல்கண்டும், பெற்றோருக்கு குங்குமமும் பிரசாதமாக கொடுத்தார் சுவாமிகள். அவர்கள் சென்ற போது சிறுமி ‘டி பார் தேவி; ஐ பார் இளங்கோ’  என சொல்லியதை கேட்டு மகிழ்ந்தார் மகாசுவாமிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !