திருத்தணி கோவிலில் ரூ.71.38 லட்சம் வசூல்
திருத்தணி; முருகன் கோவிலில், 61 நாட்களில் பக்தர்கள், 71.38 லட்சம் ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம், 22ம் தேதி முதல், ஆக., 31ம் தேதி வரை திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், கோவிலில் தினசரி நித்ய பூஜைகள் மட்டும் நடந்து வந்தது.செப்., 1ம் தேதி முதல் அரசு வழிகாட்டுதலின்படி, முருகன் கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டது. தொடர்ந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசித்த பின், தங்களது வேண்டுதலுக்காக, தங்கம், வெள்ளி, பணத்தை உண்டியலில் செலுத்தினர்.அந்த வகையில், 61 நாட்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை, நேற்று முன்தினம் கோவில் தக்கார் ஜெய்சங்கர், உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது.தொடர்ந்து கோவில் ஊழியர்கள் தங்கம், வெள்ளி, ரொக்கம் என, பிரித்து எண்ணப்பட்டது. இதில், 71 லட்சத்து, 38 ஆயிரத்து, 278 ரூபாய் ரொக்கம், 575 கிராம் தங்கம், 2,750 கிராம் வெள்ளி இருந்தன.