கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
சேலம்: கொரோனாவால், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால், வருவாய் சரிந்து, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருவாயுள்ள, சிறப்பு நிலை கோவில் – 331, இரண்டு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வருவாயுள்ள முதல்நிலை கோவில் – 672, 10 ஆயிரம் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வருவாயுள்ள, இரண்டாம் நிலை கோவில் – 3,550, ஆண்டு வருமானம், 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள, மூன்றாம் நிலை கோவில் – 34 ஆயிரத்து, 99 என, 38 ஆயிரத்து, 652 கோவில்கள் உள்ளன.
அங்கு வரும் பக்தர்களிடம் பெறப்படும் டிக்கெட் கட்டணம், உண்டியல் வருவாய், கோவில்களின் சொத்து, கடைகள் மூலம் கிடைக்கும் வாடகை ஆகியவை மூலம் பராமரிப்பு பணி, ஊழியர்களுக்கு சம்பளம், வளர்ச்சி திட்ட பணி மேற்கொள்ளப்பட்டன. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால், கடந்த மார்ச் இறுதி முதல், கோவில்கள் மூடப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அனைத்து வகை வருவாயும் இல்லாமல் போனது. கோவில்களின் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள், ஊரடங்கை காரணம்காட்டி, குறிப்பிட்ட காலங்களில் வாடகையை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். கடந்த செப்., 1ல் கோவில்கள் திறக்கப்பட்டபோதும், குறைந்த அளவில் மட்டும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. முக்கிய திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால், செப்டம்பர் முதல், 25 சதவீத வருவாய் மட்டும் உள்ளது. இதனால், சிறப்பு நிலை, முதல்நிலை கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள், தடையின்றி சம்பளம் பெறும் நிலையில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறப்பு நிலை கோவில்களில் கூட, கொரோனாவால் வருமானம் சரிந்துள்ளது. இதனால், பிற பிரிவு கோவில்களிலும் வருவாய் சரிந்து, மூன்றாம் நிலை, ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்களிலும், வளர்ச்சி பணி மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கோவில் நிலங்கள், கடைகளை, குத்தகை, வாடகைக்கு எடுத்துள்ளவர்களில், பல ஆண்டாக, அதை முறையாக செலுத்தாதவர்கள் மீது, நடவடிக்கையை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடை வாடகை உள்ளிட்ட இதர வருவாய்களை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, அறநிலையத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.