2000 ஆண்டு முந்தைய மண் பாண்டங்கள்
சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே சின்னக்கொல்லபட்டியில் தொல்லியல் ஆய்வாளரான ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லுாரி உதவி பேராசிரியர் பா. ரவிச்சந்திரன் ,அதே கல்லுாரி நுாலகர் சு.நட்டார் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்ட போது 2000 ஆண்டு முந்தைய மண் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.
உதவி பேராசிரியர் பா.ரவிச்சந்திரன் கூறியதாவது:சங்ககாலம் என அழைக்கப்படும் பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை பெரிய தாழிகளில் வைத்து புதைத்தனர். இந்த புதை விடங்கள் தாழி மேடு என அழைக்கப்பட்டது. சங்க இலக்கியமான புறநானுாற்றில் தாழிகளில் புதைப்பது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட மக்கள் வாழ்ந்த தொல் வாழ்விடங்களுக்கு அருகில் இப்புதைவிடங்கள் காணப்படுகின்றன. இங்கும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தொல் வாழ்விடமும் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்துள்ளன. அங்கு கறுப்பு - சிவப்புப் பானை ஓடுகள், சங்கு வளையல்கள், வட்ட சில்லுகள், சுண் கருவிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகளில் இருந்து கிடைக்கும் ஈமப் பொருட்களான மட்கலங்கள், இரும்பு பொருட்கள், பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட பொருட்கள், அணிமணிகள் மூலமாக அக்கால வாழ்க்கை நிலையை ஆராய்ந்து உணர முடியும். பளபளப்பான கறுப்பு - சிவப்பு நிற மட்கலத்தில் உள் பகுதி , வெளிப்பகுதி , கழுத்து பகுதி கறுப்பாகவும் மற்ற பகுதிகள் சிவப்பாகவும் உள்ளது. சூளையில் மட்பாண்டங்களை சூடு செய்யும்போது உப்பை பயன்படுத்தி பெருகூட்டப்பட்டுள்ளது. இது அதிக வெப்பத்தை தாங்க கூடியது. இதன் ஓடுகள் மெலிதாக காணப்படுகின்றன. சமையலுக்கு இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இக்கண்டு பிடிப்பின் வாயிலாக இங்கு ஓடும் வைப்பாற்றின் கரையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செழிப்பானதொரு நாகரிகம் இருந்தது தெரியவருகிறது, என்றார்.