உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தபாலில் சபரிமலை பிரசாதம்: புக்கிங் துவக்கம்; பக்தர் மகிழ்ச்சி

தபாலில் சபரிமலை பிரசாதம்: புக்கிங் துவக்கம்; பக்தர் மகிழ்ச்சி

திருப்பூர்: சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பெறுவதற்கான முன்பதிவு அனைத்து தபால் நிலையங்களிலும் நேற்று துவங்கியது.திருப்பதியை அடுத்து அதிக பக்தர்கள் செல்லக்கூடிய சபரிமலையில், நவ., மாதத்தில் மண்டல கால பூஜைகள் பெறும்.

தொடர்ந்து, 41 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த சீசனில் அதிகளவு பக்தர்கள் செல்வார்கள். கொரோனாவால், நடப்பாண்டு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுமதி. தரிசனத்துக்கு செல்லும்போது, 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் கொண்டு செல்ல வேண்டும்.இதனால், பக்தர்கள் வசதிக்கான பிரசாதங்களை தபாலில் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பக்தர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால், 3 நாளில் ஸ்பீட் போஸ்ட் மூலம் வீட்டுக்கே பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அரவணை, நெய் குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாதம் ஆகியவை அடங்கிய பிரசாதத்துக்கு, 450 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தபால் நிலையத்தில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !