ஆன்மிகத்தில் அசத்தும் அதிசய கிராமம்
சிங்கம்புணரி:வளர்த்து தொங்கும் காதுகளோடு உலாவும் ஆண்கள், வளையம் தொங்கும் காதுகளோடு உற்சாக ஆட்டம் போடும் சிறுவர்கள், மாடியில்லா வீடுகள், அப்படியே
இருந்தாலும் படியில்லா மாடிகள் என தரணியில் தனக்கான தனி முத்திரையுடன், முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வாழும் கிராமம் தான் , சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.கோவில்பட்டி.
இக்கிராமத்தில் உள்ள செகுட்டையனார் கோயிலுக்கு பூஜை வைப்பதும் இவர்களே, அந்த செகுட்டையனாருக்காக காது வளர்ப்பதும் இவர்களே.சிங்கம்புணரி ஒன்றியம் மு.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் தங்களின் ஆண் குழந்தைகளுக்கு பிறந்து 6 மாதத்தில் காதில் துளையிட்டு கனமான வளையத்தை மாட்டி விடுகிறார்கள். காது நீண்டு வளர்ந்த பிறகு, வளையத்தை கழட்டி விடுகின்றனர். காது வளர்ப்பதை தங்களின் குல தெய்வமான செகுட்டையனாருக்கு செய்யும் கடமையாகவே மதித்து வருகிறார்கள். இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வேலை செய்கிறார்கள்.இவர்கள் செகுட்டைய்யனாரை வணங்குவதால் பொய் சொல்வதில்லை, எந்த குற்ற வழக்குகளிலும் ஈடுபடுவதில்லை. இதனால் இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி காது வளர்த்துள்ள இக்கிராம மக்களுக்கு தனி மரியாதை தான்.
இங்கு அருள் பாலிக்கும் செகுட்டையனார் கோயிலில் கட்டடம் கட்டுவதில்லை. மூலவராக அடர்ந்த வனத்துக்கு நடுவில் செகுட்டையனார் திறந்தவெளியிலேயே அருள்பாலிக்கிறார். அவருக்கு தினமும் உப்பில்லா அரிசி சாதம் நைவேத்தியமாக படைக்கப்பட்டு இரண்டு கால பூஜை நடத்தப்படுகிறது. இக்கிராம மக்களே முறைவைத்து பூஜை செய்கிறார்கள்.
செகுட்டையனாருக்கு கட்டடமோ, கூரையோ கட்டக்கூடாது என்பதால் இம்மக்களும் மாடி வீடு கட்டுவதில்லை. கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல் சிலர் மாடிகளை கட்டினாலும் படி வைப்பதில்லை. படி வைத்துக்கட்டிவிட்டாலும் அதில் ஏறி மேலே செல்வதில்லை. இதை அவர்கள் சுயக்கட்டுப்பாடாகவே கடைபிடித்து வருகிறார்கள்.
சின்னையா: ஆதி காலத்தில் எங்கள் முன்னோர்கள் வேட்டைக்கு சென்று திரும்பும் போது, வள்ளிக்கிழங்கு தோண்டியுள்ளனர். அப்போது மண்ணுக்குள் இருந்த சாமி சிலையின் காதில் கடப்பாறை பட்டு ரத்தம் வடிந்துள்ளது. உடனே உறவுகள் கூடி அதே இடத்தில் சாமியை பிரதிஷ்டை செய்து செகுட்டையனாராக வழிபட்டு வருகிறோம். சாமியின் காதில் ரத்தம்
வந்ததாலும், காதில் துளைகள் இருந்ததாலும், எங்கள் சந்ததியினர் அனைவரும் காதில் துளையிட்டுக்கொள்கிறோம் என்று வேண்டி அதன்படியே காது வளர்த்து வருகிறோம். காது வளர்க்காத ஆண்கள் இக்கிராமத்தில் கிடையாது. முற்காலத்தில் பெண்களும் காது வளர்த்து வந்த நிலையில் வெளியூர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதால் அவர்கள்
தற்போது வளர்ப்பதில்லை.
முத்துக்கருப்பன்: காது வெட்டி வளையம் போடுவதற்காகவே கிராமத்தில் ஆட்கள் இருந்தனர். தற்போது அவர்கள் இல்லாததால் மருத்துவமனைகளில் வளையம் போட்டுக்கொள்கிறோம். தற்போது பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதால் காதுகளை நீளமாக வளர்க்காமல் சிறிய அளவில் வளர்த்துக்கொள்கிறார்கள். காது வளர்க்கவில்லை என்றால் சாமி குத்தம் ஏற்பட்டுவிடும் என்பது எங்களின் நம்பிக்கை.