சபரிமலை மண்டல- மகரவிளக்கு சீசனில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
நாகர்கோவில் : மார்க்சிஸ்ட் தலைமையிலான பினராயி விஜயன் அரசு, மண்டல - மகரவிளக்கு காலத்தில் சபரிமலை செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இதனால் சபரிமலை குறித்த தகவல்களை பக்தர்கள் அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண்டல - மகரவிளக்கு சீசனில் சபரிமலை நடை 61 நாட்கள் திறந்திருக்கும். ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.நவ.,15ல் தொடங்கும் சீசனில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்த ஆயிரம் பேர் மட்டுமே தினமும் அனுமதிக்கப்பட உள்ளனர்.சனி, ஞாயிறில் இரண்டாயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.போலீசார், ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சபரிமலையில் தங்கி பணி செய்ய உள்ளனர்.
ஆனால் செய்தியாளர்கள் தங்கக் கூடாது என்று கேரள அரசு உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் சபரிமலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தியாளர்கள் தங்கி பணியாற்றி வருவதை பினராயி விஜயன் அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.வயது பெண்கள் சபரிமலை செல்ல பினராயி விஜயன் அரசு எடுத்த தகடுதத்தங்களை பத்திரிகைகள் வெளிகொண்டு வந்தன. அந்த நேரத்தில் பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் வெளியேற்ற முடியவில்லை.
ஆனால் பழிவாங்கும் நடவடிக்கையாக பக்தர்களுக்கு இடையூறு என்ற காரணத்தை சொல்லி மீடியா சென்டர் கட்டிடத்தை இடித்து தள்ளினர். பின்னர் இந்த இடத்தில் கடை கட்டி வாடகைக்கு விடப்பட்டது.இப்போது கொரோனாவை காரணம் காட்டி செய்தியாளர்கள் சபரி மலையில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் சபரிமலை, பம்பையில் தங்கும் போது செய்தியாளர்கள் 100 பேர் தங்குவதால் என்ன கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சபரிமலை விபரங்களை வெளி உலகுக்கு தெரிய விடாமலும், அங்கு நடைபெறும் தவறுகள் வெளிவராமலும் இருக்கும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கையாக கேரள அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சபரிமலை தகவல்களை உடனுக்குடன் அறிய முடியாத நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.