உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருந்தினரை அழைத்தால் அபராதம் : கோவில் திருவிழாவுக்கு கட்டுப்பாடு

விருந்தினரை அழைத்தால் அபராதம் : கோவில் திருவிழாவுக்கு கட்டுப்பாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்துள்ள கிராமத்தில், ஊர் திருவிழாவுக்கு வெளியூரில் இருந்து விருந்தினர்கள் வருவதற்கு தடை விதித்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி, தாளக்கரை நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்தின், காவல் தெய்வமான பொன்முத்து மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் ஐப்பசி மாதம், திருவிழா சாட்டப்படுகிறது. இந்த திருவிழா, நல்லிக்கவுண்டன்பாளையம், காளிபாளையம், களத்துப்புதுார் ஆகிய கிராம மக்களால் கொண்டாடப்படுகிறது.கடந்த, 250 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறையை பின்பற்றி, இந்தாண்டும் திருவிழா சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம், 27ம் தேதி திருவிழா சாட்டப்பட்டது. வரும், 11ம் தேதி திருவிழா, 12ம் தேதி மஞ்சள் நீராடலுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஊர் மக்கள் வெளியூரில் உள்ள உறவினர்கள், நண்பர்களை திருவிழாவுக்கு அழைத்து, விருந்து பரிமாறி மகிழ்வது வழக்கம்.ஆனால், இந்தாண்டு வெளியூரில் இருந்து உறவினர்களை அழைப்பதற்கு தடை விதித்து, ஊர் கட்டுப்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மீறி விருந்தினர்கள் வந்தால், சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், வெளியூரில் இருந்து திருவிழாவுக்கு வரும் விருந்தினர்களால், ஊருக்குள் தொற்று பரவாமல் இருக்க இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வுடன் கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !