அபுதாபியில் ஹிந்து கோயில் வரைபடம் வெளியீடு
புதுடில்லி : மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் கட்டப்படும், முதல் ஹிந்து கோவிலின் இறுதி வடிவமைப்பு வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள, யு.ஏ.இ.,யில், இந்தியர்கள் கணிசமாக வசிக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில், 30 சதவீதம் பேர் இந்தியர்கள். அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கு, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பி.ஏ.பி.எஸ்., சார்பில்சுவாமி நாராயண் கோவில் கட்டுவதற்கு, கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. டிச.,ல் கட்டுமானப் பணிகள் துவங்கின.இந்தக் கோவிலின் இறுதி வடிவமைப்பு வரைபடம் அடங்கிய, வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவில் கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளில் துவங்கி, தற்போது நடந்து வரும் பணிகள் வரையும், கோவிலின் மாதிரி குறித்த இறுதி வரைபடமும் இடம்பெற்றுள்ளது.
கற்கோவில்: இது குறித்து, கோவில் நிர்வாகம் கூறியுள்ளதாவது:அபுதாபியில் அமைய உள்ள முதல் ஹிந்து கோவிலான, இது ஒரு கற்கோவிலாகும். கற்களால் ஆன தூண்கள் உள்ளிட்டவை, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தயாராகி வருகின்றன. இவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும். தற்போது, அடித்தளம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.ஹிந்து மதத்தின் இதிகாசங்களான, ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராதன கதைகளை குறிக்கும் வகையில் சிற்பங்கள் இடம்பெறும். மிகப் பெரிய நூலகம், திறந்தவெளி அரங்கம், உள்ளிட்டவை இந்த கோவிலில் அமைய உள்ளன.இவ்வாறு, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.