ஒரே நாளில் தீபாவளி, அமாவாசை, கேதார கௌரி நோன்பு: வழிபாட்டுக்கு தயாராகும் மக்கள்
தீபாவளி பண்டிகை, அமாவாசை, கேதார கௌரி நோன்பு ஆகிய மூன்று விசேஷங்களும் ஒரே நாளில் வருவதால் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி வழிபாடு செய்ய இந்துக்கள் தயாராகி வருகின்றனர். கொரோனோ நோய்த்தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பல மாதங்களாக வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. அனைத்து தரப்பினரும் வருவாய் இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டது. பண்டிகைகளை கொண்டாட முடியாத நிலையும் தொடர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இக்காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர். நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இதில் முக்கிய விசேஷமாக தீபாவளி பண்டிகை, அமாவாசை, கேதார கௌரி நோன்பு ஆகிய மூன்றும் ஒரே நாளில் வருகிறது. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்து உலகிற்கு ஒளி கொடுத்தது போல கொரோனா வைரஸை முற்றிலும் அழித்து மக்களை பாதுகாக்கும் வேண்டுதலை நாளைய வழிபாட்டில் முக்கியமாக கடைப்பிடிக்க உள்ளனர். குறிப்பாக முன்னோர்கள் வழிபாடான அமாவாசையும், சுமங்கலி பூஜையான கேதார கௌரி நோன்பு வருவதால் பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்துக்களின் மூன்று முக்கிய விசேஷங்களும் ஒன்றிணைந்து வருவதால் உலகம் மக்களின் நலன் வேண்டி வழிபாடு நடத்துவது கூடுதல் சிறப்பு பெற்றதாக இருக்கும்.