உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூடநம்பிக்கை எனும் இருள் விலகியது!

மூடநம்பிக்கை எனும் இருள் விலகியது!

எந்தப் பெண்கள், தீபங்களை தொடக்கூடாது என்று சொல்லப்பட்டதோ, அந்த பெண்களே தீபங்களை தயார் செய்து, திரி போட்டு, தீப விளக்கேற்றி, தீபாவளியை குதுாகலமாக கொண்டாடி வருகின்றனர். கணவனை இழந்தவர்களை, அபசகுனம் பிடித்தவர்கள் என்று கடுமையாக பார்க்கப்பட்ட கொடுமையான காலக்கட்டம் அது. 40 - 50ஆண்டுகளுக்கு முன், வட மாநிலங்களில் நிலவிய கொடூரம் அது!நோய்வாய்பட்டு அல்லது போதையில் சீரழிந்து இறந்து போகும் கணவர்கள் தான், உண்மையில் சாபத்திற்கும், பாவத்திற்கும் ஆளாக வேண்டியவர்கள். \

ஆனால், அவர்களை திருமணம் செய்த ஒரே காரணத்தால், எல்லா பழி பாவங்களையும் சுமந்து, வீட்டின் மூலையில், பிறரின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் சுமந்தபடி, அப்போது முடங்கியவர்கள் தான், இப்போது போற்றுதலுக்கு ஆளாகியுள்ள விதவையர்! இதில் இன்னும் ஒரு கொடுமை உண்டு.பால்ய விவாகம் என்ற பெயரில் நடக்கும் திருமணத்தில், கணவனாகப்பட்ட சிறுவன், ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிட்டால், சிறுமியாக இருந்தாலும், சமூகத்தில் அவளும் விதவையே.வார்த்தைகளில் அமிலம்விதவை என்றால் என்ன என்றே தெரியாமல், காலம் முழுவதும் வெள்ளை சேலையை கட்டி, சகல சந்தோஷங்களையும் தொலைத்தவளாக, சம்பளம் வாங்காத வேலைக்காரியாக, வீட்டில் எல்லார் துணியையும் துவைத்து, எஞ்சியதை சாப்பிட்டு, மிஞ்சிய வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பர்.

ஏதாவது வீட்டில் விசேஷம் வருகிறது என்றால், அந்த வீட்டில் இருக்கும் விதவையர் பாடு, படு திண்டாட்டம். விசேஷம் முடியும் வரை யார் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டும். தப்பித் தவறி பட்டுவிட்டால் அவ்வளவு தான். மொத்த குடும்பமும் வார்த்தைகளில் அமிலத்தை ஏற்றி உமிழ்வர்.பசித்தால், இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட முடியுமா என்று கூட கேட்க முடியாது. கேட்க கூடாது; நிமிரக்கூடாது; சிரிக்கக்கூடாது; யாரிடமும் பேசக்கூடாது; பூஜை அறை பக்கம் போகவே கூடாது; நல்ல துணிமணிக்கு ஆசைப்படக்கூடாது; நாலு பேரோடு உட்காரக்கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகளுடன் வீட்டில் ஒரு ஜந்துவாக வாழலாம்.

அதுவும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய, உடம்பில் தெம்பு இருக்கும் வரை.அதற்கு பிறகு, அது அம்மாவாக இருந்தாலும் சரி, மாமியாராக இருந்தாலும் சரி, கழற்றி விட வேண்டிய சுமையாக கருதுவர்; அந்த பெண் உயிரோடு இருப்பதற்காக வருத்தப்படுவர்; வீட்டை விட்டு இந்த சனியன் எப்ப ஒழியுமோ... என, காதுபடவே பேசுவர்.இந்த மனித தெய்வங்களை, காசி போன்ற புண்ணியதலங்களுக்கு அழைத்துச் சென்று, கைகழுவி விட்டு வருவர்; திரும்ப வராதே என்று, அன்பு மொழி பேசி, தொலை துார ரயிலில் ஏற்றிவிடுவர்.

மீரா சாபாக்னிவிதவையருக்கான இந்தக் கொடுமை எல்லாம், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வரை கூட, அபலைகளுக்கு, இப்படியொரு சுதந்திரமற்ற நிலை இருந்தது. உ.பி., மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் உள்ள, மீரா சாபாக்னி என்ற பழமையான ஆசிரமம், முதன் முதலாக, விதவைகளை பராமரிப்பதற்கு என்றே உருவானது.

இந்த ஆசிரமம் பற்றிய விபரம் அறிந்தவர்கள், யாருக்கு பாராமாக இருக்க விரும்பாமல், இங்கு வந்து சேர்ந்தனர் அல்லது, பாசக்கார உறவுகளால் அழைத்து வந்து சேர்க்கப்பட்டனர்.கடந்த, ௫௦ ஆண்டுகளில் இப்படி வந்த பல ஆயிரக்கணக்கான விதவையரை பராமரிப்பதற்காக, இங்கே பல ஆசிரமங்கள், ஒன்றன் பின் ஒன்றாக தொடங்கப்பட்டன.இவர்களை தங்க வைப்பதில் ஆசிரமங்களுக்கு சிரமம் எதுவும் இல்லை. ஆனால், உணவு வழங்குவதில் தான் பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக விதவையரே இங்குள்ள கோவில்களின் வாசல்களில் அமர்ந்து, பாட்டுப் பாடி பிச்சை எடுத்து, அதில் வரும் வருமானத்தில் சாப்பிட்டு வந்தனர்.விதவையர் என்றால் காலமெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா; கடைசி காலத்தில் கூட, கொஞ்சம் சந்தோஷமாக இருக்கக் கூடாதா என்று நினைத்த, இங்குள்ள, சுலப் அமைப்பின் தலைவரான, பிந்தேஸ்வர் பதக், இவர்களது பரிதாப நிலைமையை கோர்ட்டிற்கு எடுத்து சென்றார்.

எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; யார் இவர்களை முடக்கி வைத்தது; இவர்கள் சந்தோஷத்திற்கு யார் தடையாக இருந்தாலும் குற்றவாளிகளே; இவர்கள் எல்லா பண்டிகையும் கொண்டாடலாம். நியாயமான எல்லா சந்தோஷத்திற்கு தகுதியானவர்களே என்று அதிரடியாக கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, அரசின் கவனமும், சமூக ஆர்வலர்களின் கவனமும், இந்த பெண்கள் பக்கம் திரும்பியது. இப்போது, பிருந்தாவன் ஆசிரமத்தில் தங்கியுள்ள விதவையர், பிச்சை எடுப்பது இல்லை; தங்களால் முடிந்த தெரிந்த கைத்தொழிலை செய்து சம்பாதிக்கின்றனர்.நல்ல சாப்பாடு சாப்பிடுகின்றனர்; நிம்மதியாக துாங்குகின்றனர். ஆனால், சந்தோஷம் எங்கு இருந்து வரும் அது பண்டிகையை கொண்டாடுவதால் மட்டுமே வரும். இதை உணர்ந்த, சுலப் அமைப்பினர், சில ஆண்டுகளுக்கு முன், மீரா சாபக்னி ஆசிரமத்தில் விதவைகள் மட்டும் கலந்து கொள்ளும் தீபாவளி பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்தனர். ஆயிரக்கணக்கான விதவையர் கலந்து, தங்கள் கைகளால் தீபங்களை ஏற்றியும், இறைவனை தொட்டு வணங்கியும், மலர்களால் வழிபாடு செய்தும் மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகை, எல்லா மக்களுக்கும் ஒரு நாள் என்றால், இவர்களுக்கு, மூன்று நாட்கள் நடைபெறும். ஆசிரமம் மின் விளக்குகளால் ஜொலிக்கும். ஊரில் உள்ள அனைத்து விதவைகளும் கூடிவிடுவர். கலை நிகழ்ச்சி, விருந்து, ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று மூன்று நாட்களும் அமர்க்களப்படும்.

மீட்டெடுப்பு: காலம் காலமாக, கண்ணீரை மட்டுமே பார்த்த கண்கள், சந்தோஷத்தை பார்க்கின்றன. புன்னகைக்க மறந்த உதடுகள், வாய்விட்டு சிரித்தன. தங்களுக்கும் ஆட வரும், பாட வரும் என்பதை உணர்ந்தனர். சுருக்கமாக சொன்னால்,வாழ்க்கையில் தொலைத்த சந்தோஷங்களை மீட்டெடுத்தனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக இப்படி, விதவையருக்காக நடந்துவரும் சந்தோஷ தீபாவளியை, கொரோனாவை காரணம் காட்டி, இந்த ஆண்ட நிறுத்தி விடாதீர்கள்... என்று எல்லோரும் வேண்டுகோள் விடுத்ததை, அடுத்தது கடந்த புதன்கிழமை துவங்கி, குதுாகலமாக நடந்து வருகிறது.அவர்கள் ஏற்றும் ஒவ்வொரு தீபஒளியிலும் விதவையரை முடக்கிப்போடும் மூடநம்பிக்கை எனும் இருள் விலகட்டும்!

-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !