கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி
சென்னை :தமிழகம் முழுதும் நவ. 16ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் கோயில்களில் கும்பாபிஷகம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு வழிபாட்டுத்தலங்களில் பணிகள் முடிந்தும் பல மாதங்களாக கும்பாபிஷேகம் நடத்த முடியாமல் தடைபட்டுள்ளது.
எனவே கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதை பரிசீலனை செய்த அரசு தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் 16ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்துள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் முகக்கவசம் அணிதல் மற்றும் தனி நபர் இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து விழாக்களை நடத்த வேண்டும்.பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.