உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் கந்த சஷ்டி விழா துவக்கம்

மருதமலையில் கந்த சஷ்டி விழா துவக்கம்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது. முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது.

இக்கோவிலில், தைப்பூசம் மற்றும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, கந்த சஷ்டி விழா, இன்று துவங்குகிறது. காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, புண்ணியாகம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இறை அனுமதி பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்,"கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும், 20ம் தேதி, சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் அன்று, பகல், 1:00 முதல் மாலை, 5:00 மணி வரையும், 21ம் தேதி, திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது, காலை, 10:30 மணி வரையும் பக்தர்கள், கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !