இன்றைய பொழுது நல்லதாக அமையட்டும் : சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமி அருளுரை
மதுரை : மதுரைக்கு விஜயயாத்திரை செய்துள்ள சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி, நம் ஒவ்வொருவருக்கும் இன்றைய நாள் நல்லதாக அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார். மதுரை பைபாஸ்ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் தங்கியுள்ள அவர், நேற்று காலை 11மணிக்கு சாரதாம்பாள் சன்னதியில் வெள்ளிமண்டபத்தை திறந்து வைத்து பூஜைகள் நடத்தினார். மாலை 6 மணிக்கு சிருங்கேரி சுவாமிக்கு குருவந்தனம் செலுத்தப்பட்டது. இரவில் சந்திர மவுலீஸ்வர பூஜை நடத்தினார்.
அவர் வழங்கிய அருளுரை: இன்றைய இளைஞர்கள் மரண பயத்தால் தவிக்கின்றனர். எமன் எந்த உயிரையும் பறிக்காமல் விடுவதில்லை. பிறவித்துன்பத்தில் இருந்து நீங்கி மோட்சம் அடைந்த உயிர்களை எமனால் ஒன்றும் செய்ய முடியாது. மனிதனுக்கு பிறவி தொடர்ந்து கொண்டே போகும்.
தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்தினால் ஞானம் உண்டாகும். ஆனால், உபன்யாசம் கேட்க வந்தால் பலருக்கும் தூக்கம் தான் வருகிறது.
மனத்தூய்மை இல்லாவிட்டால் ஆன்மிகத்தை புரிந்து கொள்ள முடியாது. ஆசை, கோபம், பொறமை, அகங்காரம் ஆகிய அழுக்குகள் மனதில் உள்ளன. எவ்வளவு சம்பாதித்தாலும் போதும் என்ற எண்ணம் யாருக்கும் வருவதில்லை. கோபத்தை நாம் அடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
பணம், பதவி, படிப்பு இவற்றால் மனிதனுக்கு "நான் என்ற எண்ணம் உண்டாகிறது. என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. நான் செய்வது தான் சரி என்று மற்றவர்களை புறக்கணிக்கிறான். ஆனால், உயிர் போகும் போது பணமோ, பதவியோ கூட வருவதில்லை. பிறர் வளர்ச்சியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் பொறாமைப்படுவதும் கூடாது. தினமும் இன்றைய பொழுது எப்படி கழிந்தது என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமையட்டும். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத நாளே நல்லநாள். அந்த நாட்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். அனைத்திற்கும் மேலானவராக கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற சிந்தனை நம் மனதில் நிலைத்து விட்டால் மனம் தூய்மை அடையும். அந்த நல்லநிலையை அனைவரும் பெற கடவுளின் பூரணஆசி கிடைக்கட்டும், என்றார். இன்று சங்கரமடத்தில் சிருங்கேரி சுவாமி காலை 10 மணிக்கு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். இரவு 8மணிக்கு சாரதா சந்திரமவுலீஸ்வர பூஜையை நடத்துகிறார்.