உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லண்டனில் மீட்கப்பட்ட சிலைகளை கோவில் வசம் ஒப்படைத்தார் முதல்வர்

லண்டனில் மீட்கப்பட்ட சிலைகளை கோவில் வசம் ஒப்படைத்தார் முதல்வர்

 சென்னை:லண்டனிலிருந்து மீட்டு வரப்பட்ட, நாகப்பட்டினம் கோவில் சிலைகளை, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலரிடம், முதல்வர் பழனிசாமி., ஒப்படைத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, அனந்தமங்கலம் கிராமத்தில், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட, ஸ்ரீராஜகோபால பெருமாள் கோவில் உள்ளது. இலங்கையில் யுத்தம் முடிந்து, ராமர், அயோத்தி திரும்பும் வழியில், ராவண அரக்கர்களின் வாரிசுகளான, இரக்கபிந்து,இரக்தராட்சகன் ஆகியோரை அழிக்க, அனுமனை பணித்தார்.அவரும் தேவர்கள் வழங்கிய, 10 விதமான ஆயுதங்களுடன் சென்று, அரக்கர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தார்.

அயோத்தி திரும்பும் வழியில், அனந்தமங்கலத்தில் போரில் வென்ற ஆனந்தத்துடன், இக்கோவிலில் காட்சி அளித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.இக்கோவிலில், 1978 நவ., 23ம் தேதி, ராமர், சீதை, லட்சுமணர், அனுமர் சிலைகள் திருடு போயின. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தீவிர முயற்சியால், திருடு போன சிலைகள், லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, அந்த சிலைகள், லண்டனில் உள்ள இந்திய துாதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின், டில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டன.மீட்கப்பட்ட புராதான சிலைகளை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, ராஜகோபால பெருமாள் கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார். மேலும், 42 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சிலைகளை மீட்டெடுத்த, காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு, முதல்வர் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சண்முகம், உள்துறை செயலர் பிரபாகர்,டி.ஜி.பி., திரிபாதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !