கோயில்களில் முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்
தேனி : மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சியாக சுவாமி முருகனுக்கு வள்ளி- தெய்வானையுடன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 15ல் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை நடந்தது. 6ம் நாளான நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் மங்கள இசையுடன் துவங்கியது. 10:35 மணி முதல் 11:00 மணிக்குள் சுவாமி, வள்ளி- தெய்வானைக்கு திருமாங்கல்யம் சூட்டினார். இதனை கணேச சர்மா தலைமையிலான 6 சிவாச்சாரியர்கள் நடத்தினர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், கோயில் இணைச் செயலாளர் பாலசுப்பிரமணி, கவுரவ ஆலோசகர்கள் ராமர்பாண்டி, பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மாலையில் ஊஞ்சல்சேவை நடந்தது. என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமாங்கல்ய பிரசாரம் வழங்கப்பட்டது.
கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில், வேலப்பர் கோயில்களில் முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். காலை 7:00 முதல் 8:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், கோம்பை மாரியம்மன் கோயிலிலும் திருக்கல்யாணம் நடந்தது.
கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சுவாமிக்கு வள்ளி- தெய்வானையுடன் உமாமகேஸ்வர சிவாச்சாரியார் திருக்கல்யாணம் நடத்தி வைத்தார். ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் உடன் இருந்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.பெரியகுளம்காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஊஞ்சலில் அமர்ந்து முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.சுவாமி பேருக்கு பக்தர்கள் மொய் எழுதினர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முருகனுக்கு அன்னாபிேஷகமும், காய்கறி அலங்காரம் திருக்கல்யாணம் நடந்தது. வடுகபட்டி வள்ளி தேவசேனா செந்தில் முருகன்கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.*போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.