உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா கொடியேற்றம்!

சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா கொடியேற்றம்!

சிவகிரி : சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் வைகாசி பூக்குழி திருவிழா இன்று (28ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் ஜூன் 5ம் தேதி பூக்குழி நடக்கிறது. சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று மாலை 6 மணிக்கு மேல் அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. இன்று (28ம் தேதி) காலை 6.50 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. முதல் நாள் திருவிழா கீழத்தெரு தேவர் சமுதாயம் சார்பில் நடக்கிறது. தொடர்ந்து வியாபாரிகள் சங்கம், சிவராமலிங்கபுரம் தேவர் சமுதாயம், இல்லத்துபிள்ளைமார் சமுதாயம், மகுடாபிஷேக சண்முகவிநாயகர் கோவில் தெரு தேவர் சமுதாயம், வனச்சரகர் அலுவலகம், சேனைத்தலைவர் சமுதாயம் ஆகியன சார்பில் திருவிழாக்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் சயன அலங்காரம், மாங்கனி பறித்தல் அலங்காரம், திருக்கல்யாணம், அர்ச்சனை தபசு, அரவான் களப்பலி, துர்ச்சாதனன் பலி வாங்குதல் போன்ற அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. 9ம் நாளான ஜூன் 5ம் தேதி காலை கோயில் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு 4.30 மணிக்கு பூக்குழி நடக்கிறது. 10ம் திருவிழா காப்புகட்டி மண்டப விழாக் குழுவினர் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் ராமராஜா மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !