கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய திருவிழா
கழுகுமலை : கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மாதா திருவுருவ பவனி கோலாகலமாக நடந்தது. கழுகுமலைக்கு பெருமை சேர்க்கும் ஆதாரங்களில் நூற்றாண்டு பாரம்பரிமிக்க தூய லூர்தன்னை தேவாலயமும் ஒன்றாகும். தமிழகத்தின் பிரபலமான கிறிஸ்தவ கோயில்களில் காணப்படும் இரட்டை கோபுரங்களில் கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய இரட்டை கோபுரங்களும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் இத்திருவிழா கடந்த 18ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்த சபையினர், இயக்கத்தினர் வழியாக திருப்பலி, வழிபாடுகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள், பல்வேறு குருக்களின் தலைமையில் நடந்து வந்தது. கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய மேமாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தூய லூர்து மாதாவின் திருவுருப்பவனி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மாலையில் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்ட விழா மேடையில் புதிய குருக்கள் இம்மானுவேல் ஜெகன்ராஜா, லூர்துமிக்கேல் வில்சன், வினோத் பால்ராஜ், விக்டர் ராஜ் ஆகியோரது தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. தொடர்ந்து பாடகர் குழுவினர் பாடல்கள் இசைத்தபடி தொடர்ந்துவர, அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய லூர்து மாதாவின் திருவுருவ பவனி வந்தது. மேலும் எட்டயபுரம் ரோடு மற்றும் கீழபஜார் சந்திப்பு, கழுகுமலை காமராஜர் திருமண மண்டபம் ஆகிய இரண்டு இடங்களில் திருச்சி கப்புச்சின் சபை அன்பின் அமலன் அடிகளார், கோவில்பட்டி திருத்தொண்டர் ஜோசப் வர்கீஸ் ஆகியோர் பைபிள் குறித்து பேசினர். தவிர மாதாவின் திருவுருத்திற்கு பொதுமக்களின் மாலை மரியாதை வழிபாடுகளை இலொயோலா இளைஞர் இயக்கத்தினர் செய்தனர். இதையடுத்து லூர்தன்னை தேவாலயத்தில் நற்கருணை ஆசீர்வாத வழிபாடு நடந்தது. விழாவில் கழுகுமலை மற்றும் கிளை பங்குகள், சுற்றுவட்டார பொதுமக்கள், வெளியூர் வாழ் இறைமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூய லூர்தன்னை தேவாலய பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார், திருத்தொண்டர் பிரான்சிஸ் சேவியர், பங்கு ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு அருட்பணிப்பேரவை, துறவிகள், பக்தசபைகள், அன்பியங்களை சேர்ந்த இறைமக்கள் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக நற்கருணைப்பவனி, மாதாவின் திருவுருவ பவனியை போன்றே கோலாகலமாக நடந்தது.