உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்குமாரசுவாமி கோயில் தேரை முறையாக பராமரிக்க வலியுறுத்தல்!

திருமலைக்குமாரசுவாமி கோயில் தேரை முறையாக பராமரிக்க வலியுறுத்தல்!

கடையநல்லூர் : சுமார் 150 ஆண்டு கால சிறப்பு பெற்ற பண்பொழி திருமலைக்குமார சுவாமி தேர் பராமரிப்பின்றி காணப்படுவதால் மேற்கூரை அமைத்திட வேண்டும் என முருக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். அருணகிரிநாதரால் பாடல்பெற்று புகழ்பெற்று விளங்கும் முருக ஸ்தலங்களில் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் தற்போது மலைப்பாதை அமைக்கப்பட்டு பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. திருமலை மேல் கோயில் அமைந்திருக்கும் நிலையில் கோயில் நிர்வாகம் பண்பொழி ஊருக்குள் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அருகில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான தேர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் 9ம் திருநாளன்று தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். சுமார் 40 டன் எடை கொண்ட இந்த தேர் தற்போது மேற்கூரை அமைக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் கடந்த தேரோட்டத்தின் போது தென்காசி கோயிலிலிருந்து சக்கரங்கள் கொண்டு வரப்பட்டு அதனை பொருத்தி தேரோட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது கழற்றப்பட்ட பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தேருக்கு சொந்தமான சக்கரம் தெப்பக்குளம் அருகில் காட்சிப் பொருளாக அப்படியே கிடக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் மேற்கூரை அமைக்கப்படாமல் தேர் காணப்பட்டு வருவது முருகபக்தர்கள மத்தியில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டிற்கு ஒருமுறை பக்தி பரவசத்துடன் இழுக்கப்படும் தேர் பராமரிப்பின்றி மேற்கூரை அமைக்கப்படாமல் காட்சிப் பொருளாக இருந்து வருவது குறித்து இப்பகுதி பொதுமக்களும், முருக பக்தர்களும், இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளிடம் தேரை பராமரிக்கும் வகையில் உடனடியாக நான்குபுறமும் ஷட்டர்கள் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். முருக பக்தர்களின் மனக்குமுறலை களைந்திட அறநிலையத்துறை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !