சேதுக்கரையின் அவலம்: பராமரிப்பு என்பதே இல்லை
ராமநாதபுரம் : ராமபிரான் இலங்கை செல்ல பாலம் அமைத்த பகுதியான சேதுக்கரை கடற்கரை புனித தலமாக கருதப்படுகிறது. இங்கு அமாவாசை நாட்களில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்வது மிகச்சிறந்தது. நாடு முழுவதும்இருந்து இங்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம்வாய்ந்த சேதுக்கரை கடற்கரையில் பராமரிப்பு என்பதே இல்லை.
வரலாறு: திருப்புல்லாணியில் இருந்து 6 கி.மீ.,ல் உள்ளது சேதுக்கரை புனித தலம். சீதா பிராட்டியை மீட்க ராமபிரான் இங்குஇருந்துதான் இலங்கைக்கு பாலம் அமைத்தார். சேது என்றால் அணை என்று பொருள். அணை கட்டிய இடத்தில் உள்ள கரை என்பதால் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மூலவர் இலங்கையை பார்த்தவாறு உள்ளார். இங்குள்ள கடல் ரத்னாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்கு பகுதியாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில் தான் ராவணனின் தம்பி விபீஷணர் ராமபிரானிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கிருந்து 4 கி.மீ., துாரத்திலுள்ள பழமை வாய்ந்த ஏகாந்த சீனிவாச பெருமாள் கோயில் பராமரிப்பின்றி உள்ளது. கும்பாபிஷேகம் நடந்து 300 ஆண்டுகள் ஆகிறது.
அமாவாசை சிறப்பு: புண்ணிய தலமான சேதுக்கரை முக்கிய தீர்த்த தலமாக உள்ளது. ஆடி அமாவாசை, தை மகாளய அமாவாசையில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.சுகாதார சீர்கேட்டின் உச்சம்சிறப்பு வாய்ந்த புனித தலமான சேதுக்கரை சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் உள்ளது. கடற்கரையில் பக்தர்கள் பித்ரு கடன் முடித்து நீராடும் போது உடுத்திய துணிகளை களைந்து கடலில் விட வேண்டும் என்பது ஐதீகம். இப்படி பக்தர்கள் விட்டுச்சென்ற துணிகள் கடற்கரை படித்துறை அருகே குவிந்து கிடக்கிறது. இந்த துணிகள் மாதக் கணக்கில் கிடப்பதால் மணலில் புதைந்தும், கடல் நீரில் பாசிபிடித்தும் துர்நாற்றம் வீசுகிறது.
குப்பை மேடான கடற்கரை: 2 கி.மீ., நீண்ட கடற்கரை கொண்ட சேதுக்கரையில் கடற்கரை முழுவதும் குப்பை மேடாக உள்ளது. கடல் அரிப்பால் விழுந்த சீமைக்கருவேல மரங்கள், அதன் முட்செடிகள், குப்பை நிறைந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.ஆஞ்சநேயர் கோயிலை ஒட்டிய கடற்கரை பகுதியில் இதுபோன்ற சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
ஆபத்தான சுற்றுச்சுவர்: ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில் சுற்றுச்சுவர் கடல் உப்பு காற்றால் அரித்து செங்கற்கள் தெரிகின்றன. பல இடங்களில் சுவரில் நீளமாக ஓட்டை விழுந்துஉள்ளது. இதே போல் சுற்றுச்சுவர் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. பக்தர்கள் அதிகம் வரும் நாட்களில் இவை விழுந்தால் ஆபத்து ஏற்படும்.மேலும் கோயில் உள் பிரகாரம் மணற்பரப்பாகஉள்ளதால் கோடை காலங்களில் பக்தர்கள் பிரகாரத்தை வலம் வர முடிவதில்லை.
கழிப்பறை,உடைமாற்றும் அறை: கோயில் அருகே உள்ள பழைய கழிப்பறை மற்றும் உடைமாற்றும் அறை சேதம் அடைந்த நிலையில், புதிய உடைமாற்றும் அறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் முழுமையாக பக்தர்கள் பயன்பாட்டில் இல்லை.கழிப்பறை வசதியும் போதுமானதாக இல்லை. இதனால் வெளியூர் பக்தர்கள், குறிப்பாக பெண்கள் அவதிப்படுகின்றனர். நுழைவு கட்டணம் வசூல்கோயிலுக்கு வருவோரின் வாகனங்களுக்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காருக்கு ரூ.100, ஆட்டோவுக்கு ரூ.20, டூவீலருக்கு ரூ.15 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சேதுக்கரை ஊராட்சி நிர்வாகம் ரூ.6.25 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளது.மேலும் சுற்றுலா தலத்திற்கான பராமரிப்பு நிதி பெறப்படுகிறது. இருந்தாலும் கடற்கரை பராமரிப்பு, பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகளை கூட உடனுக்குடன் அகற்றாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. சேதுக்கரை ஊராட்சி தலைவர் ஜம்ரத் நிஷா கூறுகையில், ஒருவாரமாகத்தான் அகற்றப்படவில்லை. பணியாளர்களை புயல் எச்சரிக்கையால் முகாம்களில் தங்க வைத்துஉள்ளனர். கடற்கரை ஒட்டிய பகுதியில் துப்புரவு பணி செய்வோம்.கோயில் பராமரிப்பு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள்தான் இந்த பணிகளை செய்ய வேண்டும்.