உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்

கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி இரவு 7 மணிக்கு அமராவதி ஆற்றில் இருந்து கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு விழா தொடங்கியது.அதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் மற்றும் திருவீதி உலா நடந்தது. கடந்த 18 ம் தேதி பூச்செரிதல், 20 ம் தேதி காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு திருத்தேர் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (29 ம் தேதி) அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை (30 ம் தேதி) மாலை 5.15 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் வைபவம் நடக்கிறது. இதையொட்டி கரூர் மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் குமார் உத்தரவின் பேரில் 300 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகின்றனர்.இரவு 8 மணிக்கு அமராவதி ஆற்றில் கரூர் ஸ்ரீ மாரியம்மன் வாண விழா டிரஸ்ட் சார்பில் தலைவர் கருப்பசாமி தலைமையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை துணைத்தலைவர் சுந்தர்ராஜ், சங்க செயலாளர்கள் பக்தவச்சலம், பெரியசாமி, துணைச்செயலாளர் முனியப்பன், பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.தொடர்ந்து அடுத்த மாதம் 7 ம் தேதி பஞ்சபிரகாரம், 8 ம் தேதி புஷ்ப பல்லக்கு, 9 ம் தேதி ஊஞ்சல், 10 ம் தேதி அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !