உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

காரமடை கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

மேட்டுப்பாளையம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது.

கோவை மாவட்டம், காரமடையில், வைணவ ஸ்தலமான அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில், பகல் பத்தும், அதை தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பும், பின்பு ராபத்து உற்சவமும் நடைபெறும். சொர்க்கவாசல் திறக்கும் அன்று, அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சேஷ வாகனத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், விழாவில் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபடுவது வழக்கம்.

இந்தாண்டு கொரோனா பிரச்னையால், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா அன்று, அரங்கநாத சுவாமி திருவீதி உலா வருமா என்ற சந்தேகம், பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியின் விழாவின் முதல் நிகழ்வான, பகல்பத்து உற்சவம், காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று காலை துவங்குகிறது. ரங்க மண்டபத்தில் எழுந்தருளும் அரங்கநாத பெருமாள் முன்பு, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் எழுந்தருள்வர். அதைத்தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் திருமொழியில் உள்ள பாசுரங்களை சுவாமி முன்பு சேவிப்பர். இந்நிகழ்வு முடிந்த பின்பு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !