ஓசோன் வாயு
மார்கழி வைகறைக் காலத்துப் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி, படிப்படியே அதிகம் ஆகின்றபோது, அதை அனுபவிக்க தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லிய காற்று தருகின்ற குளிர்ச்சி, சுகம் சுகமே. இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகம் மார்கழியில் மட்டும் அதிகமாக கிடைக்கின்றது. வளிமண்டலத்தில் ஓசோன் என்ற வாயுப்படலம் நில உலகத்தில் இருந்து 19 கி.மீ. உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. மார்கழி விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜை செய்தனர். நோன்பு நோற்றனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கு ஒரு தனிப்பெருமை கிடைத்தது.