உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி மசூதியின் வரைபடம் வெளியீடு

அயோத்தி மசூதியின் வரைபடம் வெளியீடு

 லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள மசூதியின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கக் கூடியதாக, முட்டை வடிவில் இந்த மசூதி அமைய  உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய நிலம்  தொடர்பான வழக்கில், ’அங்கு ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்’ என, உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு தீர்ப்பு அளித்தது.’அயோத்தியின் முக்கிய இடத்தில் மசூதி கட்டுவதற்கு, 5 ஏக்கர் நிலத்தை  மாநில அரசு ஒதுக்க வேண்டும்’ என, தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, அயோத்தியின் தானிபுர் கிராமத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.மசூதி கட்டுவதற்காக, ஐ.ஐ.சி.எப்., எனப்படும், இந்தோ - இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளையை, உத்தர பிரதேச சன்னி  வக்பு வாரியம் அமைத்துள்ளது.இந்த வளாகத்தில், மசூதி, மருத்துவமனை, பொது சமையற்கூடம் உள்ளிட்டவை அமைய உள்ளன. இவற்றுக்கான மாதிரி படங்கள், நேற்று முன்தினம்  வெளியிடப்பட்டன.இது குறித்து, அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளதாவது:இந்த வளாகத்தில், முட்டை வடிவில், நவீன தொழில்நுட்பத்துடன் மசூதி கட்டப்படும். இரண்டு தளங்கள் உடைய இந்த மசூதி,  சூரிய மின்சக்தியில் இயங்கும். ஒரே நேரத்தில், 2,000 பேர் தொழுகை நடத்தும் வசதிஉடன் கட்டப்பட உள்ளது.இதைத் தவிர, 200 படுக்கை வசதிகளுடன் கூடிய, பல்நோக்கு மருத்துவமனையும்  அமைக்கப்படுகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்க, பிரமாண்ட சமையற்கூடம், நுாலகம் உள்ளிட்டவையும் இந்த வளாகத்தில் இடம்பெறும்.நாட்டின் குடியரசு தினமான, வரும், ஜன., 26ல் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.  அன்றைய தினமே, பணிகளை துவக்க திட்டமிட்டோம். ஆனால், ஒப்புதல்கள் பெறுவது உள்ளிட்டவை அதற்குள் முடிவதற்கு சாத்தியமில்லை. அதனால், அடுத்தாண்டு, ஆக., 15ல் கட்டுமான பணிகள்  துவங்கும்.அடிக்கல் நாட்டு விழா, இஸ்லாமிய முறைப்படி நடக்கும். அதனால், யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. கட்டடங்கள் திறப்பு விழாவுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவர்.இவ்வாறு, அவர்கள்  கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !