சிதம்பரம் நடராஜர் தேரோட்டத்தில் வடம் பிடிக்க அனுமதி
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டத்திற்கு அனுமதியளித்த முதல்வருக்கு பொது தீட்சிதர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக வரும் 31 ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்ததால் தேர் மற்றும் தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தேரை டிராக்டர் மூலம் இழுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டு, சாத்தியகூறுகள் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோவில் வாயிலில் பக்தர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் பாஸ்கர் தீட்சிதர் உள்ளிட்டோர் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியனிடம் தேர் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும். முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் 3 தினங்களுக்கு முன் பொது தீட்சிதர்கள் முதல்வரை சந்தித்து முறையிட்டனர். முதல்வர் உத்தரவின் பேரில் தேர் விழாவில் 1000 பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பொது தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொது தீட்சிதர்கள் சார்பில் முதல்வர் பழனிசாமி மற்றும் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.