கட்டிக் காப்பார் கால பைரவர்
ADDED :1836 days ago
சிவபெருமானின் பலவிதமான கோலங்களில் ஒன்று பைரவர். இவரது 64 வடிவங்களில் கால பைரவர் சிறப்பு மிக்கவர். பக்தர்கள் விரும்பும் வரத்தை சரியான காலத்தில் அருள்பவர் இவர். உயிரை பறிக்கும் காலன் போல நம்மை வாட்டும் துன்பங்களில் இருந்து விடுவிப்பவர். இக்கட்டான சூழ்நிலையில் இவரை சரணடைந்தால் நிச்சயம் கரை சேர்ப்பார். தீராக் கடன், குடும்ப பிரச்னை, குழந்தையின்மை, நீதிமன்ற வழக்குகளில் இருந்து நம்மை விடுவிப்பவர் கால பைரவ மூர்த்தி. காசியின் காவல் தெய்வமான இவருக்கு பூஜை நடந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் நடக்கின்றன.
வாழ்க்கை, தொழிலில் எதிரியால் தொல்லை ஏற்படும் போது, தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இதனால் எதிரிகள் இருக்குமிடம் தெரியாமல் விலகிச் செல்வர். தீயசக்திகள் இருப்பதாக உணர்ந்தால் பைரவருக்கு அபிஷேகம் செய்து தீர்த்தத்தை வீட்டில் தெளிக்க பிரச்னை தீரும். பைரவரின் வாகனமான நாய்க்கு உணவு அல்லது பிஸ்கட் அளித்து பசி போக்கினால் பைரவரின் அருள் கிடைக்கும். ஞாயிறன்று ராகு காலத்திலும், தேய்பிறை அஷ்டமி நாளிலும் செய்வது பன்மடங்கு பலன் தரும்.