கணியூர் ஐயப்பன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
உடுமலை:கணியூர் ஐயப்பன் கோவிலில், 8ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மண்டல பூஜை, கடந்த இரு நாட்களாக நடந்தது.நேற்று முன்தினம், ஜண்டை மேளத்துடன், குதிரை வாகனத்தில், ஐயப்பன் அமராவதி ஆற்றுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமி ஐயப்பனுக்கு, ஆறாட்டு உற்சவம் நடந்தது. 5:00 மணிக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற, வாண வேடிக்கை முழங்க, ஊர்வலமாக, கோவிலுக்கு சுவாமி வந்தார்.நேற்று காலை, 8:30க்கு, மூலவர் ஐயப்ப சுவாமிக்கு, 24 வகையான மூலிகை அபிஷேகம், 9 நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்தாபிஷேகம், பால் குட ஊர்வலம் மற்றும் 108 சங்காபிஷேக பூஜைகள், உலக நலன் வேண்டி நடந்தது.மண்டல பூஜையை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.