உமாமகேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
மயிலாடுதுறை: புகழ்பெற்ற கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, 8.5 அடி உயர நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது:-
மார்கழி மாத பவுர்ணமியில் வரும் ஆருத்ரா தரிசனம் புகழ்பெற்றதாகும். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் வரும், இந்த நாளில், சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் கோனேரிராஜபுரம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் திருநல்லம் என்று அழைக்கப்பட்ட இங்கு பாடல்பெற்ற பழைமை வாய்ந்த உமாமகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், சோழ அரசியால் கட்டப்பட்ட நடராஜர் சன்னதி உள்ளது. எட்டரை அடி உயரம் பிரம்மாண்டமான பஞ்சலோக நடராஜர் சிலை தமிழகத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில்களில் ஒன்றாகும். இன்று மார்கழி திருவாதிரையை முன்னிட்டு, அதிகாலை நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில், நடராஜருக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சந்தணம் சாத்தப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.