ஒன்பது மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் நடராஜர் வீதியுலா
திருவண்ணாமலை: ஒன்பது மாதங்களுக்கு பிறகு, ஆருத்ரா தரிசனத்தையொட்டி, திருவண்ணாமலை, மாடவீதியில் நடராஜர் வீதியுலா நடந்தது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், சுவாமி மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவில் பிரகாரத்துக்குள் மட்டும் சுவாமி பிரகார உலா நடந்து வந்தது. கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் நடந்த, சுவாமி உலாவுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில், பக்தர்கள் கோரிக்கையால், கோவிலில் நடக்கும் விழாக்களுக்கு, சில தளர்வுகளை, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. நேற்று, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில், நேற்று அதிகாலை, சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளினார். நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அப்போது, தீபதிருவிழாவின் மகா தீப மை, நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சிவகாமி சுந்தரி சமேத நடராஜர், திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு, மாடவீதியில் பவனி வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒன்பது மாதங்களுக்கு பிறகு, மாட வீதியில், சுவாமி உலாவை பக்தர்கள் தரிசித்தனர்.