உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி வீதியுலாவுக்கு அனுமதி: தமிழக அரசுக்கு கோரிக்கை

சுவாமி வீதியுலாவுக்கு அனுமதி: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை:கோவில்களில் சுவாமி வீதியுலாவுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், மார்ச், 25ல்,ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. சில மாதங்களுக்கு பின், கிராம பகுதிகளில், கோவில்கள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல், படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து கோவில்களும், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

பிரபலமான கோவில்களுக்கு வருவோர், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், திருச்செந்துார் உட்பட சில கோவில்களில், ஆன்லைனில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என, அனைவரும் ஒரே வரிசையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது, ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைனில் முறையாக முன்பதிவுசெய்தவர்களை, தனியே அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல, கோவில்களில் சுவாமி வீதியுலாவிற்கு, இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. சுவாமி வீதியுலா சென்றால், கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறையும். அவரவர் தங்கள் வீடுகளின் முன் நின்று, சுவாமியை வழிபடுவர். முதல்வரின் தேர்தல் பிரசாரம் மற்றும் தி.மு.க., நடத்தும், மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு, ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.இதற்கெல்லாம் அனுமதி அளிக்கும் அரசு, சுவாமி வீதியுலாவிற்கு மட்டும், அனுமதி மறுப்பது ஏன் என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.அனைத்து தளர்வுகளையும் அறிவித்துள்ள தமிழக அரசு, கோவில்களில் சுவாமி வீதியுலாவிற்கு, அனுமதி அளிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !