உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‛ஆந்திராவில் ஹிந்து கோவில்களை காப்பாற்றுங்கள்

‛ஆந்திராவில் ஹிந்து கோவில்களை காப்பாற்றுங்கள்

 ஐதராபாத்: ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்ந்து பல மாதங்களாக சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு டுவிட்டரில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்தம் கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையை, விஷமிகள் சிலர், சமீபத்தில் சேதப்படுத்தினர். அதேபோல் அங்குள்ள ராஜ மூர்த்தி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சேதப்படுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில் விஜயவாடாவில் உள்ள சீதாராமர் கோவிலில் உள்ள களிமண்ணால் ஆன சீதா தேவி சிலை, மற்றொரு கோவிலில் இருந்த கேது சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்படுவது கடந்த சில மாதங்களாகவே ஆந்திராவில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக அரங்கேறி வருகிறது. இதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ‛சுவாமி சிலைகள், விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டு, ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. முதல்வர் ஜெகன்மோகன் கிறிஸ்துவர் என்பதற்காக, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது. அப்படி செய்வது, ஹிந்துக்களுக்கு துரோகம் இழைப்பதாகும், என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

ஆந்திராவில் கடந்த 18 மாதங்களில் இதுவரை 127 கோவில்களில் இவ்வாறு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5, 6 கோவில்களில் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் உள்ள ஹிந்து சிலைகளை பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை ஜெகன்மோகன் தலைமையிலான அரசு கைது செய்தது. ஹிந்து சிலைகள் மீதான தாக்குதல்களை விஷமிகள் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.

இது குறித்த சம்பவங்களை டுவிட்டரில் பகிர்ந்து பலரும் கோவில்களை காப்பாற்றுமாறு #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக்கில் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர், கடந்த செப்டம்பரில் 60 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க கோவில் தேர் தீவைக்கப்பட்டது, 12ம் நூற்றாண்டு நந்தி சிலை உடைப்பு என அடுத்தடுத்து கோவில்களில் சம்பவங்கள் நிகழ்வதால், ஆந்திராவில் கோவில்களுக்கு ஆபத்து என பதிவிட்டுள்ளனர். சிலர், ‛இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கடவுள்களின் மீது விஷமிகள் நடத்தும் கொடூர தாக்குதல் எனவும், இதற்காக நிச்சயம் விஷமிகள் தண்டிக்கப்படுவார்கள், எனவும் பதிவிட்டு வருகின்றனர். ஹிந்து கோவில்களில் விஷமிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த சகித்துக்கொள்ள முடியாத செயலை கண்டித்தும், டுவிட்டரில் பகிர்ந்து வருவதால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டிரெண்டானது. இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மேல் இந்த ஹேஸ்டேக் மூலமாக ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு குரல் கொடுத்து வருகின்றனர்.

வாசகர்கள் கவனத்திற்கு

ஆந்திர மாநில வாசகர்களே , உங்கள் பகுதியில் ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தால், அவற்றின் புகைப்படங்களை, கோவில் விவரங்களுடன் கீழ்கண்ட இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்
Email: dotcomdept@dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !