மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவங்கப்படுமா?
திருக்கோவிலூர்: ஆபத்தான நிலையில் இருக்கும் மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலை திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை வலுத்தூள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆகம விதிப்படி கோவிலை புனரமைக்காததால் கோவில் உள்பிரகாரம், மூலஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி கோவிலின் சுவர்கள் சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. பூஜை செய்ய கோவிலுக்குள் செல்பவர்கள்கூட அச்சத்துடனே செல்ல வேண்டிய ஆபத்தான நிலையில் இருக்கிறது. விலைமதிப்பற்ற பழமையான பஞ்சலோக சிலைகளும் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழமையான, பிரசித்திப் பெற்ற இக்கோவிலை திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்பதே மணலூர்பேட்டை பகுதி பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.