உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகப்பெருமானின் திருநாமங்கள்!

முருகப்பெருமானின் திருநாமங்கள்!

கந்தன், சிவகுருநாதன், தண்டபாணி, காங்கேயன், சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என பல பெயர்களால் முருகப்பெருமான் அழைக்கப்டுகிறார். ஓம் என்ற மந்திரத்தின் பொருளுக்கு விளக்கம் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்து சிருஷ்டித் தொழிலை அவரே மேற்கொண்டார். பிரணவத்தின் பொருளை தன் தந்தையான சிவபெருமானுக்கே குருவின் இடத்தில் அமர்ந்து கூறியவர். இப்படி பல பெருமைகள் கொண்ட கந்தன் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். வியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, கந்தனின் உன்னதமான பல பெயர்களைக் கூறி அருளினார். இவற்றில் சில..

ஸ்கந்தன் - சத்ருக்களை அழிப்பவன், (ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக பற்றுக்கோடாக இருப்பவன்; சிவஜோதியாக வெளிப்பட்டவன். கார்த்திகேயன் - கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன். குமாரன் - குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்) இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்; மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்; அஞ்ஞானம் அழித்து ஞானம் தருபவன். சண்முகன் - ஆறு முகம் உடையவன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன். (அருணகிரியின் திருப்புகழ் பாடல்களைப் படித்தால் இது உண்மையென்று விளங்கும்).

காங்கேயன் - கங்கை நதியில் உண்டானவன். ஞானசக்த்யாத்மா - ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக இருப்பவன். அக்னி பூ - அக்னியில் உண்டானவன்; அக்னியால் ஏந்தப்பட்டவன்; அக்னி ஜோதியாக எழுந்தவன். பாஹுலேயன் - வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன்.

சரவணோத்பவன் - நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின் மறுவுருவம் சரவணமடுவாம் - அதனில் தோன்றியவன்). குக்குடத்வஜன் - கோழியைக் கொடியாகக் கொண்டவன்; சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத்திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது. குஹன் - பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக குஹன், அதிகார குஹன் என்பர். (லய குஹன் - உயிரை ஒழிவில் ஒடுக்கி ஒழிவில் ஒடுக்கம் என்ற பதவி தருபவன். யோக குஹன் - ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன். அதிகார குஹன் - பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.)

சக்திதரன் - வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு ஆயுதமாயினர்).

ஷாண்மாதுரன் - ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக உடையவன். க்ரௌஞ்சபித் - க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்; அஞ்ஞானம் என்கிற மலையை - இருளை ஞானம் என்கிற வாளால் தகர்ப்பவன். சிகிவாஹனன் - மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம் முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான். ப்ரம்மசாரி - வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !