உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: குண்டம் இறங்கிய பக்தர்கள்

பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: குண்டம் இறங்கிய பக்தர்கள்

அரூர்: அரூர் அருகே, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி, குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குடுமியாம்பட்டியில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, நாமக்கல், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள, கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள், மார்கழி மாதம் முழுவதும் கடும் விரதமிருந்து, தை முதல் நாளில், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். இதையொட்டி, பெரிய மாரியம்மன் கோவிலின், 29ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. முன்னதாக, விழாவில், பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியபடியும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, கோவில் முன், பக்தி பரவசத்துடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குண்டம் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: உடல்நிலை பாதிப்பு, நோய் ஏற்பட்டால், நாங்கள் மருத்துவமனைக்கு செல்வதில்லை. அம்மனை வந்து வணங்கிச்சென்றாலே, அனைத்து நோய்களும் தீர்ந்து விடும். பண்டிகை என்றாலே, எங்களுக்கு, இந்த அம்மன் திருவிழா தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !