உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருண பகவானின் ஆசியோடு மருதமலையில் கொடியேற்றம்

வருண பகவானின் ஆசியோடு மருதமலையில் கொடியேற்றம்

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத்தை ஒட்டி, வருண பகவானின் ஆசியோடு, கோவிலில் கொடியேற்றப்பட்டது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மற்றும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவையெட்டி, நேற்று முன்தினம் இரவு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. விநாயகருக்கு புன்யாகவாசனம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், யாக வேள்வி, இறை அனுமதி பெறுதல் உள்ளிட்டவைகள் நடந்தன. காலை, 7:45 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சேவற்கொடி பொறிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட, 25 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்டிருந்த கொடி, கோவில் முகப்பில் உள்ள கொடிமரத்தில், கொடி மங்கல நாண்களால் ஏற்றப்பட்டது. கொடி மரத்தில், கொடி ஏற்றும் போது, திடீரென மழை பெய்தது. இதனைக்கண்டு பரவசமடைந்த பக்தர்கள், அரோகரா, அரோகரா என்று கோஷம் எழுப்பினர். சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவ மூர்த்தியான, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரமாக, கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர். மாலையில், அனந்தாசனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !