ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்
திருவாரூர்: ஞானபுரீ சித்திரகூடஷேத்திரம் ஸ்ரீசங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. 
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குருஸ்தலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்திரகூடஷேத்திரத்தில், ஸ்ரீசங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, ஒரு ஆண்டு பூர்த்தியானதை முன்னிட்டு, நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம், சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ கிருஷ்ணாநந்த தீர்த்த மஹாஸ்வாமிகள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயபகவான், ஸ்ரீசீதா, லட்சுமண, அனுமந் சமேத ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளை செய்தார். தொடர்ந்து, மஹா சுவாமிகளால் அனுமன் கதா சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இக்கோவிலில், அனுமனின் கதையை கையில் ஏந்தி, ராம நாமத்தை உச்சரித்தபடி, விஸ்வரூப ஆஞ்சநேயசுவாமியை மூன்று முறை வலம் வந்து தரிசித்தால், வேண்டுதல் கை கூடும் என்பது ஐதீகம். இச்சேவையை, மஹாசுவாமிகளின் உத்தரவுப்படி, கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணாதொடங்கி வைத்தார். மாலை வெள்ளி ரத உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் செய்திருந்தார்.