சிவன்மலை கோவிலில் தைப்பூச தேரோட்டம்
ADDED :1752 days ago
திருப்பூர்: சிவன்மலை தேரோட்டம், இந்தாண்டு கொரோனா காரணமாக ஒருநாள் மட்டும் நடந்தது. திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தேரோட்டம் தைப்பூசம் நாளில் துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும். கோவில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு ஒரு நாள் மட்டும் தேரோட்டம் நடந்தது.மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, உற்சவமூர்த்திகள், தேரில் எழுந்தருளினர்.சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. நேற்று மாலையே, நிலையை வந்தடைந்தது. பக்தர்கள், உடல்வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே, இடைவெளியுடன் மலை மீது அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.