உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வாறோம்...அய்யனாரை தேடி வாறோம்: மேளதாளத்துடன் புரவிகளின் புறப்பாடு!

ஆடி வாறோம்...அய்யனாரை தேடி வாறோம்: மேளதாளத்துடன் புரவிகளின் புறப்பாடு!

மேலூர்: மேலூர் அருகே 13 ஆண்டுகளுக்கு பின் நடந்த புரவி எடுப்பு விழாவில், பக்தர்கள் தங்கள் குதிரைகளை போட்டி போட்டு "மேக் அப் செய்திருந்தது, காண்போரை வெகுவாய் கவர்ந்தது. ஏ.வல்லாளபட்டி தெற்குவளவு கிராமம் சார்பில் பெரியபுலி அய்யனார், சின்னபுலி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். கோயில் கும்பாபிஷேகம் காரணமாக இம்முறை 13 ஆண்டுகளுக்கு பின், பிடி மண் கொடுத்து விழாவிற்கு தயாராகினர். நேர்த்திக்கடனாக சுமார் 1,500 புரவிகள் தயாராகின. கடந்த 10 நாட்களாக விரதம் அனுசரித்து, புரவிகளை வழிபட்டு வந்தனர். பெரியபுலி அய்யனாருக்கு புரவி எடுக்கும் விழா நேற்று நடந்தது. அய்யனார் வேடம் பூண்டவர்களின் சாமி ஆட்டத்துடன், பெண் ஒருவர் கரகம் எடுத்து வர புரவி எடுப்பு தொடங்கியது. ஒரு பெண் உட்பட 18 சாமியாடிகள் பொம்மை தூக்கியதும், சுமார் 600 நேர்த்திக்கடன் குதிரைகள் பின்தொடர்ந்தன. புறப்பாட்டிற்கு முன்பாக, யார் குதிரை "ஒஸ்தி என்ற போட்டிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரும் தங்கள் குதிரைகளை கண்ணாடி, பலூன், தென்னங்கீற்று, சரிகைகள், கலர் காகிதங்களால் போட்டி போட்டு அலங்கரித்திருந்தனர். மேளதாளத்துடன், ஆடி, அசைந்து, அய்யனார் வீற்றிருக்கும் புலிப்பட்டி கிராமத்திற்கு , அலங்கரித்த புரவிகளை பக்தர்கள் சுமந்து சென்றது, காண்போரை கவர்ந்தது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பெண்கள், குரவையிட்டு புரவிகளை வரவேற்றனர். மேலநாடு (15 கிராமங்கள்) பெரிய அம்பலகாரர் ராஜேந்திரன் கூறியதாவது: அனைத்து மதத்தினரும் வழிபடுவதால், இது ஒரு சர்வசமய புரவி எடுப்பு விழா. நேற்று பெரிய புலி அய்யனாருக்கு புரவி எடுப்பு முடிந்தது. இன்று சண்முகநாதபுரத்தில் உள்ள சின்னப்புலி அய்யனாருக்கு புரவு எடுப்பு நடக்கும். நேற்றை விட, இன்று அதிக குதிரைகள் நேர்த்திகடன் செலுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !