பிரதிஷ்டா தின உற்சவம் முடிந்தது சபரிமலை கோவில் நடை அடைப்பு!
சபரிமலை:பிரதிஷ்டா தின உற்சவம் முடிந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. இனி, ஆனி மாத பூஜைகளுக்காக, வரும் 14ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மூலவர் பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, கோவில் நடை, 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளும், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களாக, படி, உதயாஸ்தனம பூஜைகளும், சகஸ்ரகலசாபிஷேகம், சந்தன, நெய் அபிஷேகம் ஆகியவையும் நடத்தப்பட்டன.பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் நடந்த, லட்சார்ச்சனையை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னின்று நிர்வகித்தார். தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க, கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முதலில் லட்சார்ச்சனை செய்த கலச நீரும், தொடர்ந்து சந்தன அபிஷேகமும் சுவாமிக்கு செய்விக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்ட பிரதிஷ்டா தின உற்சவம் முடிந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல்சாந்தி பாலமுரளி சுவாமிக்கு விபூதி அபிஷேகம் செய்வித்து, ஜபமாலை அணிவித்தும், தியானத்தில் இருத்தி, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. இனி, வரும் 14ம் தேதி ஆனி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை திறக்கப்படும்.